இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்: தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

3 weeks ago 5

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில், இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று, புத்தாண்டு 2025 பிறக்கிறது.தமிழ்ப் புதல்வன், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம், கலைஞர் கைவினைத்திட்டம், “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம், இரண்டு கோடிப் பயனாளிகளைக் கடந்த மக்களைத் தேடி மருத்துவம், 500 கோடிக்கும் அதிகமான கட்டணமில்லாப் பயணங்கள் செய்யப்பட்டுள்ள விடியல் பயணம் திட்டம், இந்திய அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் “நான் முதல்வன்” திட்டம், மகளிரின் பொருளாதாரத் தன்னிறைவை நோக்கிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.48 லட்சம் பேருக்கு கூடுதலாக விரிவாக்கம், அத்திக்கடவு – அவிநாசி திட்டம் என 2024 ஆண்டு தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசின் தொடர் சாதனைப் பயணம் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

இந்தச் சாதனைகளை உச்சிமுகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “நாற்பதுக்கு நாற்பது” என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். தமிழ்நாடும், புதுச்சேரியும் அளித்த அந்த மாபெரும் வெற்றிதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்கான குரல் இன்னும் உயிர்ப்போடு ஒலித்துக் கொண்டிருக்க- தொடர்ந்து நிலைத்து நிற்க மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து- இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024ம் ஆண்டு – மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ஆம் ஆண்டு! புத்தாண்டாகிய 2025-இல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

The post இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்: தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article