இலைக்கட்சியின் முதுகில் ஏறி மீண்டும் சவாரி செய்யலாம் என அல்வா ஊர் எம்எல்ஏ கனவில் மிதப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 day ago 4

‘‘சேலத்துக்காரர் டெல்லி சென்று திரும்பியதும் இந்தியாவின் இரும்பு மனிதர் ஷா என மாஜி உதயமானவர் புகழாரம் சூட்டி சொந்தக்கட்சிக்காரங்களையே கதிகலங்க வைத்து விட்டாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியின் மாஜி மந்திரியான உதயமானவர் சமீப காலம் வரை தாமரையின் மலை துவங்கி அத்தனை தரப்பையும் தாறுமாறாக விமர்சித்து வறுத்தெடுத்து வந்தார். சேலத்துக்காரர் டெல்லி போய் தாமரை கட்சியின் ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியதுதான் தாமதம், படாரென ‘இந்தியாவின் இரும்பு மனிதர் ஷா’ என்று புகழாரம் சூட்டி வீடியோ வெளியிட்டு சொந்தக் கட்சியினரையே கதிகலங்க வைத்து விட்டார். அரசியல் லாபத்திற்கென காலத்திற்கொரு கோலம், நேரத்திற்கொரு நிறம் மாறும் சாகச மந்திரக்காரர் என்று கட்சி நிர்வாகிகளே விமர்சனங்களால் இவரை வெளுத்தெடுக்கின்றனர். கட்சிக்குள் தோழி வந்தபோது, தனது மங்கல தொகுதியையே ராஜினாமா செய்து, அவருக்கு தாரை வார்க்க தயார் என்று அறிக்கை விட்டு அசத்தியவர், அடுத்த சில காலங்களில் தோழியின் காலை வாரியதில் ஒண்ணாம் நம்பரில் இருந்தார். பலாப்பழக்காரருக்கு ஆதரவாகி எம்பி தேர்தலின் போது அவரின் மகனுக்கென களத்தில் உழைப்பதாக படம் காட்டியவர், அடுத்த சில நாட்களில் படக்கென்று கட்டம் கட்டி பலாப்பழக்காரரையே காலி செய்ததிலும் முதலிடம் பிடித்தார். ரத்தத்தை தேடும் அட்டையாக எங்கு லாபத்திற்கான பசை இருந்தாலும் சூழ்நிலைக்கு தக்கதாக பச்சென ஒட்டிக் கொண்டு இவர் பஜனை பாடுவதைக் கண்டு கட்சித் தொண்டர்களே அரண்டு போயிருக்கிறார்கள். இப்போதும் ‘கோட்டைக்குரியவர்’ முந்துவதால், சேலத்தை தூர தொலைத்து, தன் அரசியல் பயணம் தடையின்றி தொடர கோட்டை புகழ்பாடி பயணிக்கவும் தயாராகி வருகிறார் என்று விவரமறிந்தவர்கள் உதயமானவர் குறித்து விலாவாரியாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓபிஎஸ்சை நம்பி வந்து நட்டாற்றில் விட்டதுதான் மிச்சம் என மாவட்ட செயலாளர்கள் புலம்புறாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களுக்குள் கடும் விரக்தி ஏற்பட்டு இருக்காம்.. வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் டிடிவி ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவுமானவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் முக்கிய நிர்வாகிகள் செல்லவில்லையாம்.. பலரை அழைத்து, நீ தான் ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர், நகர செயலாளர் என நியமித்துள்ளனராம்.. ஆனால் அவர்கள் யாரும் செயல்படவில்லையாம்.. இந்நிலையில் கட்சியை மீட்டுவிடுவார் என்று தன்னால் இயன்றதை செய்து வந்தாங்களாம்.. குறிப்பாக ஓபிஎஸ் ராமநாதபுரம் எம்பி தொகுதி தேர்தலில் போட்டியிட்டபோது மன்னர் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் சென்று தேர்தல் பணியாற்றினாங்களாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு இபிஎஸ்சை அழைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் பேசினார். அதன் பிறகு இணைப்புக்கு வேலையில்லை என இபிஎஸ் பேட்டி கொடுத்தார். ஓபிஎஸ் ஒன்றும் செய்வதில்லை. அவரை நம்பி வந்ததற்கு நம்மளை நட்டாற்றில் விட்டு விட்டனரே என புலம்பி வருகின்றனராம்.. இபிஎஸ் அணியினர் அழைத்தபோதே போயிருந்தா நமக்கு பதவி இல்லாட்டியும் மரியாதையாவது கொடுத்து இருப்பாங்க. இனி போனா நம்மல கிண்டல் பண்ணமாட்டாங்களா என புலம்புகிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிபிஐயின் அடுத்த ஆட்டத்தை கண்டு கலக்கத்தில் இருக்காங்களாமே துறை தலைகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலா பகுதியான புதுச்சேரியில் பொதுவான பணியில் லஞ்சம் தலைவிரித்தாடியதாம்.. இதன் எதிரொலியாக சிபிஐயின் ரகசிய கண்காணிப்பு வளையத்திற்குள் துறையே வந்ததாம்.. புதுச்சேரியில் ரெய்டு நடத்தினால் தப்பி விடுவார்கள் என வியூகமிட்ட சிபிஐ, காரைக்காலில் பொறிவைத்து பதுங்கியிருந்ததாம்.. அதில் உயர் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை கையும் களவுமாக பிடிபட்டார்களாம்.. இவ்விவகாரம் பூதாகரமாகவே துறையை கவனிக்கும் அமைச்சரை, பதவி விலகக்கோரி அவரது வீட்டை, கை தரப்பு திரண்டு முற்றுகையிட்டதாம்.. இதற்கு போட்டியாக அமைச்சரின் சகாக்கள் ஒன்றுகூடி எதிர் போராட்டத்தை நடத்தி உள்ளார்களாம்.. அவதூறு போஸ்டர் ஒட்டுறாங்கப்பா…. நடவடிக்கை எடுங்கப்பா… என்று கொந்தளித்து இருக்கிறாங்களாம்.. நிலைமை இப்படியிருக்க லஞ்ச புகாரில் ஏற்கனவே உள்ள பத்திரம், மின்சாரம், கலால், போக்குவரத்து ஆகிய துறைகளில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி சிபிஐ அடுத்த ஆட்டமாக தகவல் திரட்டி வருகிறதாம்.. இதனால் துறை தலைகள் கலக்கத்தில் உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்த தேசிய கட்சி எம்எல்ஏக்களில் ஒருத்தர் மீண்டும் எம்எல்ஏ கனவில் மிதக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அல்வா ஊரின் தேசிய கட்சி எம்எல்ஏ மிகவும் குஷியாக இருக்கிறாராம்.. அதாவது, 2021 சட்டமன்ற தேர்தலின் போது இலைக்கட்சியுடன் தேசியக் கட்சியும் கூட்டணியில் இருந்தது. இலைக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்த தேசியக் கட்சி, 4 எம்எல்ஏக்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்தில் நுழைந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இலைக்கட்சி – தேசியக் கட்சி கூட்டணி டமால் ஆனது. கடந்த மக்களவை தேர்தலில் இலைக் கட்சியுடன் கூட்டணி வைக்க தேசியக் கட்சி முயன்றும் பேரம் படியாமல் போனது. இதனால் தனித்து நின்ற இலைக் கட்சிக்கும், தேசியக் கட்சிக்கும் முட்டைத்தான் மிஞ்சியது. எனினும் அதைப்பற்றி கவலைப்படாத இலைக் கட்சியின் சேலம்காரர் தொடர்ந்து தேசியக் கட்சியை சாடி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தலைநகருக்கு விசிட் அடித்த சேலம்காரர், தேசியக் கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்துப் பேசினார்.

இதனால் தேசியக் கட்சியின் மிரட்டலுக்கு இலைக் கட்சி பணிந்து விட்டதாக பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருது.. இதை கண்டு தேசியக் கட்சியினரும் உற்சாகத்தில் மிதக்கின்றனராம்.. குறிப்பாக அல்வா ஊரின் எம்எல்ஏ எப்படியும் இலைக் கட்சியின் முதுகில் ஏறி மீண்டும் சட்டமன்றம் சென்று விடலாம் என்ற கனவில் மிதக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post இலைக்கட்சியின் முதுகில் ஏறி மீண்டும் சவாரி செய்யலாம் என அல்வா ஊர் எம்எல்ஏ கனவில் மிதப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article