‘‘தலைக்கு ஐநூறு கொடுக்கிறோம்னு சேலத்துக்காரர் கலந்துக்கிட்ட பொங்கல் விழாவுக்கு அழைத்துச்சிட்டு வந்து ஏமாத்திட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் பொங்கல் விழா கொண்டாடினாராம்.. இதற்காக அவரது அடிப்பொடிகள் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செஞ்சியிருந்தாங்களாம்.. கண்ணுக்கு எட்டியவரை தலைகளாகவே இருக்கணுமுன்னு, தலைக்கு ரூ.500 பேசி அழைச்சிக்கிட்டு போனாங்களாம்.. காளைக்கு 2 ஆயிரம், பொங்கல் வைப்போருக்கு புடவை, பொங்க பானை, கரும்பு இனாமுன்னு அழைச்சிக்கிட்டு போயிருக்காங்க..
இலைக்கட்சி தலைவர் வரும் முன்பாக, மைக்கை பிடித்த நிழலானவரு, கட்சி எம்எல்ஏ, எம்பிக்களை வறுத்தெடுத்துட்டாராம்.. இதனால தொண்டர்கள் ரொம்பவே அப்செட் ஆகியிட்டாங்களாம்.. இதோ வருகிறார், அதோ வருகிறார் என்ற அறிவிப்புக்கிடையில், இலைக்கட்சி தலைவர் வந்தாராம்.. அவருக்கு பூ தூவி வரவேற்றாங்களாம்.. எல்லா புஷ்பமும் அவரது தலையிலே விழுந்ததினால் தலைவரு, கோபம் கொப்பளிக்க பார்த்தாராம்.. மேடை ஏறி மைக்கை பிடித்ததும், காசு கொடுத்து அழைச்சிக்கிட்டு போனவங்க கரும்பை பறித்துக்கொண்டு நடையை கட்டியிருக்காங்க.. மைக்கில் எவ்வளவோ கெஞ்சியும் யாரும் கேட்கலையாம்..
இதனால பேசியபடி 500 கொடுக்காம டிமிக்கி கொடுத்திட்டதாக மகளிர் வருத்தப்பட்டிருக்காங்க.. நாங்க எடுத்துட்டுபோன கரும்பை தந்திடுறோம்.. பணத்தை தாங்கன்னு சிலர் கெஞ்சிப்பார்த்தும் கேட்கலையாம்.. கடந்த பொங்கலுக்கு ஓமலூரில் பொங்கல் விழா நடத்தியவருக்கு எம்.பி., சீட் கிடைச்சதாம்.. அதேபோல சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு தான் சீட் கிடைக்குமுன்னு 5 பேருக்கு ஆசைகாட்டி வச்சிருக்காராம் தலைவரின் நெருங்கிய நண்பர். தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருக்கும் நிலையில், ஒரு சீட்டுக்கு எதுக்கு 5 பேரிடமும் உனக்கு தான், உனக்கு தான்னு சொல்றாருன்னு, ரத்தத்தின் ரத்தங்கள் கேள்வி கேட்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொத்து முடக்கம் வைத்தியானவரை கடும் அப்செட்டில் ஆழ்த்திவிட்டதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியத்தை சேர்ந்த வைத்தியானவர் தேனிக்காரர் அணியில் இருக்கிறார். வைத்தியானவரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதால் வைத்தியானவர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.. தனது ஆதரவாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளை கூட பார்ப்பதை அவர் தவிர்த்து வருகிறாராம்.. அடுத்தடுத்து என்ன நடக்க போகிறதோ என்று கூட புரிந்துகொள்ள முடியாமல் டென்சனில் இருந்து வருகிறாராம்…
தன்னுடைய ஒவ்வொரு நகர்வையும் யாரோ கண்காணித்து வருவதாக வைத்தியானவருக்கு டவுட் வந்து இருக்காம்.. இதனால் முக்கிய விஷயங்களை கூட நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களிடம் செல்போனில் பேசுவதை தவிர்க்கிறாராம்.. ஏதாவது பேச இருந்தாலும் தன்னை நேரில் சந்தித்து பேசுமாறு முக்கிய நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளாராம்.. இந்த டாப்பிக் தான் தேனிக்காரர் அணியில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மதுக்கடைகளை திறக்கும் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிட்டாராமே புல்லட்சாமி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் பட்ஜெட் தொடர்பான முடிவெடுக்க சமீபத்தில் புல்லட்சாமி தலைமையிலான அமைச்சரவை கூடியது. இதில் அரசின் வருமானத்தை உயர்த்தி மாநில செலவினங்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.. குறிப்பாக புதிய மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆளும் தரப்புக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதாம்..
அதாவது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தாமரை தரப்பைச் சேர்ந்த இளம் பிரதிநிதி, இதுதொடர்பான கலந்தாலோசனையின்போதே இது தனது கட்சி கொள்கைக்கு எதிரானது என போர்க்கொடி தூக்கி விட்டாராம்.. இதனால் ஆளும்தரப்புக்குள் சலசலப்பு ஏற்படவே அவசரம் அவசரமாக கூட்டம் முடிக்கப்பட்டதாம்.. வருவாய்க்கு வழி இதுவாக இருப்பினும், தற்போதைக்கு பிரச்னையை சமாளிக்க வேறு வழியில்லாததால் தற்காலிகமாக தள்ளிவைக்கும் முடிவில் இருக்கிறாராம் புல்லட்சாமி.. இந்த திடீர் பின்வாங்கல் பற்றிதான் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு..” என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் மா.செ. பதவியை பறிக்க புது திட்டம் போட்டிருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரான மாங்கனி நகரில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தர்மபுரியை சேர்ந்த ஒருவரை பொறுப்பாளராக போட்டாங்களாம்.. அவரும் சர்வே செஞ்சதோடு புதியவர்களுக்கு பதவியை அள்ளி கொடுத்தாராம்.. அதோடு மட்டுமல்லாமல் தனது பேச்சை கேட்காதவர்களின் பதவியையும் பறித்தாராம்..
இதனால் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டதா கட்சிக்காரங்க சொல்றாங்க.. இலைக்கட்சி தலைவருக்கும் புகார்களை தட்டி விட்டாங்களாம்.. கட்சிக்காக உழைத்து ஓடாய் போன எங்களை தூக்கி விட்டு புதிய கோஷ்டியை அவருக்கென வளர்த்து வருவதாகவும் அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்ததாம்.. இந்த புகாரை உடைத்து, தான் நல்லவர் என்பதை இலைக்கட்சி தலைவருக்கு காட்டணுமேன்னு திட்டம்போட்ட பொறுப்பாளர், கட்சி நிறுவனரின் பிறந்த நாளில், கையை முறுக்கிக் கொண்டு நிறுவனரான மூன்றெழுத்துக்காரரை விட்டுவிட்டு தற்போதைய இலைக்கட்சி தலைவர் பெயரைச்சொல்லி வாழ்த்து கோஷம் போட்டாராம்..
இதனை சற்றும் எதிர்பாராத அருகில் இருந்த நிர்வாகிகள், இதென்ன புதுசா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டதோடு அவர்களும் பின்பாட்டை எழுப்பி தப்பித்தோமுன்னு இருந்தாங்களாம்.. இதோடு மட்டுமல்லாமல் இவரால் பதவி பெற்றவர்கள், தற்போது பொறுப்பாளரின் புகழை தூக்கிப்பிடிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவரையே முன்னிலைப்படுத்துறாங்களாம்.. சீறுபவரே, சீரமைக்க வந்தவரே என்று பழைய ‘கல்லாப்பெட்டி’ நடிகரின் பெயரை குறிப்பிட்டு புதுகோஷத்தை எழுப்பிக்கிட்டு இருக்காங்களாம்..
மாவட்ட செயலாளர் பதவியையும் அவரு பறிக்கப்போகிறார். அதுவும் சீக்கிரமாகவே நடக்குமுன்னு மா.செ.வுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி பரப்பிக்கிட்டு இருக்காங்களாம்.. எது எப்படியோ, பொறுப்பாளரின் வாழ்த்து கோஷத்துல இலைக்கட்சி தலைவர் மயங்குவாரா என்பதுதான் மாங்கனி நகர தொண்டர்களின் கேள்வியா இருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post இலைக்கட்சி தலைவரின் ஊரில் மா.செ. பதவியை பறிக்க போட்டிருக்கும் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.