இலுப்பூர்: இலுப்பூர் அருகே உள்ள கரந்தபட்டியில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டில் 16 காளைகள் பங்கேற்றன. இலுப்பூர் அருகே உள்ள கரந்தபட்டி அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி கரந்தபட்டி குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மைதானத்தில் நேற்று காலை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். பின்னர் 9.15 மணிக்கு போட்டி துவங்கியது.
போட்டியை இலுப்பூர் கோட்டாச்சியர் அக்பர்அலி கொடியசைத்து துவக்கி வைத்தார். இலுப்பூர் டிஎஸ்பி முத்துராஜா, இலுப்பூர் வட்டாச்சியர் சூர்யபிரபு, இலுப்பூர் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் போட்டியை கண்காணித்தனர். 16 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர். திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 16 காளைகள் பங்கேற்றன. ஓவ்வொரு சுற்றுக்கும் தலா 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. 9 பேர் கொண்ட குழுவாக 144 மாடுபிடி வீரர்கள் 16 சுற்றுகளாக களத்தில் நின்று மாடுகளை பிடித்தனர்.
மாலை 3.30 மணி வரை இந்த போட்டி நடைபெற்றது. காளைகளை பிடித்த வீராகளுக்கும், பிடிபடாத காளைகளுக்கு ரொக்கம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் 11 பேருக்கு லோசான காயம் ஏற்பட்டது. சுகாதார துறையினரால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இலுப்பூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை கரந்தபட்டி, மாரப்பட்டி மற்றும் கோனார்களம் பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post இலுப்பூர் அருகே உள்ள கரந்தபட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு: வீரர்களை மிரளவைத்த காளைகள் appeared first on Dinakaran.