ஆண்டிபட்டி: இலவம் பஞ்சுக்கு ஆதார விலை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருசநாடு விவசாயிகள் மனு அளித்தனர். ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இலவம் பஞ்சு சாகுபடி செய்து வருகின்றனர். இந்த இலவம் பஞ்சு ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவாய் தரக்கூடியதாகும். இலவம் பஞ்சு கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.120 வரை விற்றநிலையில், நடப்பாண்டில் வெறும் ரூ.38க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், அதிக லாபத்திற்காக விலையை குறைத்து வருவதாகவும், இலவம் பஞ்சுக்காக என்று எந்த ஒரு சந்தையும், கமிஷன் மண்டியும் இல்லாத சூழ்நிலையில் வியாபாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆண்டிபட்டி தாலுகா, தும்மக்குண்டு ஊராட்சி வாலிப்பாறை மற்றும் சுற்றுவட்டார 24 கிராம விவசாய பொதுமக்கள் சார்பில், இலவம் பஞ்சுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், கதர் கிராம வாரியம் மூலம் அரசு நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
The post இலவம்பஞ்சுக்கு ஆதார விலை கோரி கலெக்டர் அலுவலகத்தில் வருசநாடு விவசாயிகள் மனு appeared first on Dinakaran.