மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் படைகள் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிபந்தனையற்ற மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.
இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை இலக்காக கொண்டு நேற்று உக்ரைன் படைகள் பெரிய அளவிலான டிரோன் தாக்குதலை நடத்தி உள்ளனர். மாஸ்கோவை இலக்காக கொண்ட 35 டிரோன்கள் உள்ள மொத்தம் 105 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடை மறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாஸ்கோவைச் சுற்றி உள்ள விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள 4 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இதனிடையே டிரோன் தாக்குதல் காரணமாக கனிமொழி பயணித்த விமானம் மாஸ்கோவில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு தாமதமாக தரையிறங்கியது. ‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு குழுக்களை அனுப்பியுள்ளது. அதன்படி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர், அதிகாரிகளுக்கு இன்று மாஸ்கோவில் கனிமொழி தலைமையிலான குழு விளக்கம் அளிக்க உள்ளது. லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி தலைமையிலான குழு பயணிக்கிறது.
The post மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்கள் :கனிமொழி சென்ற விமானம் தாமதமாக தரையிறக்கம்!! appeared first on Dinakaran.