*கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக ராணிப்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் 2022ம் ஆண்டு முதல் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் சென்னை தலைமை அலுவலகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்றுநர்களை கொண்டு வகுப்புகள் நடைபெறுகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக செயல்படும் நூலகத்தில் 1200க்கு மேற்பட்ட போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் உள்ளன. போட்டித்தேர்வுக்கான வகுப்புகள் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10.30 முதல் மாலை 4மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் முழு மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
மாணவ, மாணவிகள் எவ்வித சிரமமின்றி வகுப்புகளுக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகள், நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து படிக்க, காற்றோட்டமான அமைதியுடன் கூடிய சூழல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஸ்மார்ட் போர்ட், எல்.இ.டி புரோஜெக்டர் வகுப்பறைகள், போட்டித்தேர்வுகள் தொடர்பான தினசரி, மாதாந்திர இதழ்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்புற இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பிரத்யேக இணைய தளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
2025ம் ஆண்டு குரூப்- 4 வகுப்பு கடந்த ஜனவரி அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு தற்பொழுது 54 பேர் வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக செயல்படுகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தில் செயல்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் இதுவரை 810 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, 2024ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணி நியமன ஆணைகள் கிடைக்கப் பெற்று பணியில் சேர்ந்துள்ள 9 நபர்களுக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக நினைவுப் பரிசுகளை கலெக்டர் சந்திரகலா வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற சோளிங்கர் வட்டம் வாங்கூர் பகுதியை சேர்ந்த முருகன் தெரிவித்ததாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித்தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக எனது நண்பர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். உடனடியாக பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். வீட்டில் தனியாக படிப்பதை விட அங்கு என்னை போன்ற சக போட்டியாளர்களுடன் இணைந்து படித்தது எனக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியது.
பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுநர்கள், போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், சிற்றேடுகள், மாதிரி தேர்வுகள், நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தினசரி, மாதாந்திர இதழ்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்- 4 தேர்வில் தேர்ச்சி பெற்று தட்டச்சராக, சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை பெற்றுள்ளேன். எனது குடும்பம் தற்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு பணியில் சேர்ந்துள்ள 9 பேர் முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.