இலங்கையில் கற்ற பாடங்களை தற்போது இந்தியாவுக்கு கொண்டு வருவது முக்கியம் - ரச்சின் ரவீந்திரா

3 months ago 21

பெங்களூரு,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மழையால் விளையாட முடியாதது ஏமாற்றத்தை கொடுத்தது. பெரும்பாலும் இந்திய துணைக்கண்டத்தில் 6 தொடர்ச்சியான போட்டிகளில் விளையாட நியூசிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்காது.

எனவே இது சில வெற்றிகளை பதிவு செய்வதற்கான நல்ல வாய்ப்பாகும். அத்துடன் இது வீரராகவும், அணியாகவும் அனுபவங்களைக் கற்று முன்னேறுவதற்கான வாய்ப்பாகும். கண்டிப்பாக இந்தியாவும் இலங்கையும் வித்தியாசமான இடங்கள். ஆனால் சுழல் பந்துகளைப் பொறுத்த வரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இடங்கள். இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் தரமான அணி.

அதை அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் காண்பித்துள்ளனர். அங்கே கற்ற பாடங்களை தற்போது இந்தியாவுக்கு கொண்டு வருவது முக்கியம். எங்களிடம் வில்லியம்சன், டாம் லாதம், மிட்சேல், கான்வே போன்ற தரமான வீரர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அணுகுமுறைகள் உள்ளது. ஐ.பி.எல் வித்தியாசமான பார்மட் என்றாலும் இங்கே விளையாடியது நல்ல தன்னம்பிக்கையை கொடுத்தது.

குறிப்பாக ரசிகர்களையும் எதிர்பார்ப்பையும் எப்படி கையாள்வது என்பது முக்கியம். ஏனெனில் இந்தியாவில் மக்கள் கிரிக்கெட்டின் மீது எந்தளவுக்கு ஆர்வத்தைக் கொண்டவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட இந்தியாவில் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது ஸ்பெஷல். இங்கே ரசிகர்களின் ஆர்வம், எதிர்பார்ப்பு அற்புதமாக இருக்கும். அதற்கு மத்தியில் இந்தத் தொடரில் விளையாட ஆர்வத்துடன் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article