இலங்கைக்கு கடத்த முயன்ற 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

1 day ago 3

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தி செல்லப்பட உள்ளதாக கடலோர காவல் படையின் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் உச்சிப்புளி தெற்கு கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது கடற்கரை பகுதியில் 5 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டைகள் அனைத்தும் பதப்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் கடலோர காவல் படையினரை கண்டதும் கடல் அட்டைகளை பிடித்து வந்த கடத்தல்காரர்கள் தப்பி ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் எனவும், இதனை இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து இங்கு கொண்டு வரப்பட்டதாகவும் இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர், மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Read Entire Article