
புதுடெல்லி,
வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து வாரிய உறுப்பினர் முகமது அதீப் கூறுகையில், 'எங்கள் சொத்துகளை அபகரித்துவிடலாம் என்று நினைத்து இந்தக் காட்சியைத் தொடங்கி இருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்று நினைக்காதீர்கள்' என ஆவேசமாக கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, 'நாங்கள் போராட்டத்தில் தோற்று விட்டதாக கருத வேண்டாம். தற்போதுதான் தொடங்கி இருக்கிறோம். இந்த மசோதா இந்தியாவின் கட்டமைப்பையே ஆபத்தில் தள்ளுவதால், இது நாட்டைக் காப்பாற்றுவதற்கான போராட்டம்' என்றும் தெரிவித்தார்.
மசோதாவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் எனக்கூறிய அதீப், இந்த சட்டத்தை திரும்பப்பெறும்வரை ஓயமாட்டோம் என்றும் கூறினார். வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இந்த மசோதாவை திட்டவட்டமாக நிராகரிப்பதாக கூறிய வாரிய துணைத்தலைவர் அலி மொசின், விவசாயிகளின் போராட்டத்தைப்போல வாரிய உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என்றும் அறிவித்தார்.