
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா சென்றிருந்தபோது அவர் நல்ல நண்பர் என்று பாராட்டியபோதிலும், இந்தியாவின் அதிக வரிவிதிப்பை விமர்சித்தார். இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் பேசும்போது, ஏப்ரல் 2-ந் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்றும் கூறினார்.
தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றார். அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறி வந்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே கூறிய பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். டிரம்பின் இந்த வரி வதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழலும் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.