இலங்கை தமிழ் மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க 25 முகாம்களில் ரூ.49 லட்சத்தில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

4 hours ago 2

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* முகாம்வாழ் இலங்கைத் தமிழ் மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும், முதற்கட்டமாக 25 முகாம்களில், முகாம் ஒன்றிற்கு ரூ.1,99,500 வீதம் 25 முகாம்களில் ரூ.49,87,500 செலவில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்படும். இந்த படிப்பக கட்டடம் 600 சதுர அடியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நிதியின் மூலம் கட்டித்தரப்படும். இதன் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களிடையே கல்வி கற்றல் மற்றும் திறன் வளர்ச்சி மேம்படுத்தப்படும்.

* அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மெடிகல் பெசிலிடேசன் செல் அமைக்கப்படும். இதன் மூலம் வாரிய உறுப்பினர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளுடனான இணைப்பு அதாவது, சிகிச்சை முன்பதிவு, தங்கும் வசதி, மொழி உதவி உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில், உலக தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து இத்திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உதவியோடு செயல்படுத்தப்படும்.

* வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம், தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி இறுதி ஆண்டு முடித்தவர்களுக்கு உலகளாவிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரும் நோக்கத்தை வழிநடத்த டிஎன்எஸ்கில்ஸ் (TNSKILLS) இன்டர்நேஷனல் நிறுவப்படும்.

சிறப்பு பயிற்சி, இடம்பெயர்வு உதவி மற்றும் தொழில் ஆதரவை வழங்க சிறந்த பயிற்சி மையங்கள் நிறுவப்படும். இந்த முயற்சி உலகளாவிய வேலைவாய்ப்பையும், அதிக வருமான வாய்ப்புகளையும், அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு திறமையான நபர்களின் முக்கிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும்.

The post இலங்கை தமிழ் மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க 25 முகாம்களில் ரூ.49 லட்சத்தில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article