
துபாய்,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 48.2 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளும், அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் இத்தொடரில் ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சமாரி அத்தபத்துவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும், ஒரு கரும்புள்ளியையும் ஐ.சி.சி அபராதமாக விதித்துள்ளது. மேலும், சமாரி அத்தபத்துவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்றும் ஐ.சி.சி தெளிபடுத்தியுள்ளது.