இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரு படகுடன் கைது: மீனவ குடும்பத்தினர் சாலை மறியல்

3 months ago 19

ராமேஸ்வரம்: மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 300 விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மாலையில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 10 ரோந்து கப்பல்களில் அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்தனர். சிறைபிடிக்கும் நோக்கில் தொடர்ந்து விரட்டியதால், மீனவர்கள் வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

ஆனால் தங்கச்சிமடத்தை சேர்ந்த செல்வம், உயிர்த்தராஜ் ஆகியோரின் இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். இரு படகுகளையும் கைப்பற்றி, அதிலிருந்த மீனவர்கள் செபஸ்டியன் (38), ராஜீவ் (35), விவேக் (35), இன்னாசி (36), சாமுவேல் (33), பிரிஜோன் (31), பாஸ்கரன் (30), இருதய நிஜோ (26), மரியசீலன் (27), துரை (39), அருள் தினகரன் (23), சுரேஷ் (45), ஜீவன் பிரைஜர் (22), மார்க்மிலன் (37), மில்டன் (48), ரொனால்ட் (48), சேசுராஜா (45) ஆகிய 17 பேரை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், சக மீனவர்கள் ராமேஸ்வரம் – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடம் முருகன் கோயில் எதிரே சாலையோரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.

The post இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரு படகுடன் கைது: மீனவ குடும்பத்தினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article