இலங்கை கடற்படையால் சித்ரவதை செய்யப்படும் 13 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்வோம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர்மல்க பேட்டி

3 months ago 8

புதுச்சேரி, பிப். 5: இலங்கை கடற்படையால் சித்ரவதை செய்யப்படும் 13 காரைக்கால் மீனவர்களை உடனே விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்வோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்மல்க கூறினர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த 13 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கடந்த 27ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை கைது செய்தனர்.

துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்டு 8 நாட்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி கொடும் தாக்குதல் நடத்தி வரும் இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய அரசை வலியுறுத்தி தமிழக, புதுச்சேரி சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் புதுச்சேரி சுதேசி மில் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அமைப்பின் தலைவர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். அனைத்து மீனவர் கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள் முன்னிலை வைத்தனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் மலையாளத்தான், மாநில அமைப்பாளர் தணிகாசலம், முதன்மை செயலாளர் சக்திவேல் மற்றும் மீனவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள 13 காரைக்கால் மீனவர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், இலங்கை கடற்படை கைது செய்துள்ள 13 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் கடலில் குதித்து தற்கொலை செய்வோம் என கண்ணீர் மல்க கூறினர்.

தலைவர் மங்கையர்செல்வன் கூறும்போது, ‘இந்திய கடல் எல்லைக்குள்ளே அத்துமீறி இலங்கை கடற்படை நுழைந்து, காரைக்கால் மீனவர்களை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்ளது. இதில் செந்தமிழ் என்பவரின் இடது கால் எலும்பு சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி சதைகள் படகிலே சிதறி கிடந்துள்ளது. 13 மீனவர்களையும் கயிறுகளால் கட்டி குப்புற படுக்க வைத்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் பின்மண்டையில் படுகாயம் அடைந்த மாணிக்கவேல் என்பவரின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. 13 மீனவர்களையும் உடனடியாக மீட்டுவர வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என்றார்.

The post இலங்கை கடற்படையால் சித்ரவதை செய்யப்படும் 13 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்வோம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர்மல்க பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article