
கொழும்பு,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ஆன தன்சித் ஹசன் 7 ரன்களிலும், அவரை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் எமோன் - தவ்ஹித் ஹ்ரிடோய் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் வங்காளதேச அணி சரிவிலிருந்து மீண்டது போல் தெரிந்தது. ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் வங்காளதேச அணி மீண்டும் சரிவுக்குள்ளானது. எமோன் 67 ரன்களிலும், ஹ்ரிடோய் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர்களில் தன்சிம் ஹசன் சாகிப் (33 ரன்கள்) தவிர வேறுயாரும் நிலைக்கவில்லை. விரைவில் ஆட்டமிழந்தனர்.
45.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த வங்காளதேச அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்க உள்ளது.