இறுதி கட்டத்தில் மகா கும்பமேளா: கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

21 hours ago 2

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது.

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 56 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவின் கடைசி வாரத்தில் திரிவேணி சங்கமத்திற்கு வருவதற்காக ஏராளமாக மக்கள் ரெயில் நிலையங்களில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் மேலும் நடைபெறாமல் இருக்க ரெயில்வே சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில் நிலையங்களில் பயணிகள் தங்குமிடங்களை (ஹோல்டிங்) அமைத்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரெயில்வே, வட மத்திய ரெயில்வே, வடகிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு மத்திய ரெயில்வேயில் உள்ள பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகள் தங்குமிடங்களை ரெயில்வே நிறுவியுள்ளது. பயணிகள் ஒரே இடத்தில் கூடுவதை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணிகள் இந்த இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பின்னர், ரெயில்கள் புறப்படும் நேரங்களின் அடிப்படையில் பயணிகள் நடைமேடைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, காஜியாபாத், புது தில்லி, அயோத்தி தாம், பனாரஸ், கோரக்பூர் உட்பட பல ரெயில் நிலையங்களில் இதுபோன்ற பயணிகள் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பண்டிகை காலங்களில் கூட்டத்தை நிர்வகிப்பதையும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Read Entire Article