புதுடெல்லி: மகாராஷ்டிரா, டெல்லி தேர்தலில் பாஜ போலி வாக்காளர்கள் மூலம் வென்றதைப் போல மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள சில வாக்காளர்களின் தேர்தல் அடையாள அட்டை எண்ணும், பிற மாநிலத்தில் உள்ளவர்களின் அடையாள அட்டை எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சில வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனாலும், தொகுதி, வாக்குச்சாவடி போன்ற பிற விவரங்கள் வேறுபட்டவை. வாக்காளர் அட்டை எண்ணை பொருட்படுத்தாமல், எந்தவொரு வாக்காளரும் அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட தொகுதியில், அவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது.
வாக்காளர் அட்டை எண்கள் ஒரு அடையாளத்திற்கானது மட்டுமே. வாக்காளர் அட்டை எண் ஒதுக்கும் பணிகள் டிஜிட்டல் ஆக்குவதற்கு முன்பாக சில தேர்தல் அதிகாரிகள் ஒரே மாதிரியான எண்ணெழுத்து தொடரை பயன்படுத்தினர். அது, வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் எண் வழங்குவதற்கு வழிவகுத்தது. தற்போது ஈரோநெட் மூலம் வாக்காளர்கள் விவரங்கள் சேமிக்கப்படுகின்றன.
இதில், வாக்காளர்களின் எந்தவொரு அச்சத்தையும் போக்க பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனித்துவமான அடையாள எண் ஒதுக்குவதை உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே, ஒரே மாதிரி வாக்காளர் அட்டை எண் கொண்டவர்களுக்கு புதிய எண் ஒதுக்கப்படும். இதற்காக ஈரோநெட்2.0 தளம் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
The post இரு வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அட்டை எண் இருப்பதால் போலி ஆகிவிடாது: தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.