இரு நாட்டு ராணுவ மோதலுக்கு பின் சீன அதிபருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

8 hours ago 4

பீஜிங்: ஒன்றிய ெவளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாடுகள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக சீனாவின் துணை அதிபர் ஹான் ஜெங், வெளியுறவு அமைச்சர் வாங் யியை அந்நாட்டுத் தலைநகர் பீஜிங்கில் நேற்று ஜெய்சங்கர் சந்தித்தார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், இன்று நடக்கும் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், ‘பீஜிங்கில் இன்று காலை எனது சக எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்தேன். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் வாழ்த்துகளை தெரிவித்தேன். இருநாடுக்கு இடையேயான உறவில் சமீபத்தில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து அவரிடம் விளக்கினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ மோதலைத் தொடர்ந்து இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடர்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

The post இரு நாட்டு ராணுவ மோதலுக்கு பின் சீன அதிபருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article