வேலூர் பாலமதி மலையில் திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபர் கைது: ரத்தம் வழிந்தபடி ஓடியதால் பரபரப்பு

9 hours ago 4

வேலூர், ஜூலை 16: வேலூர் பாலமதி மலையில் திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ரத்தம் வழிந்தபடி ஊருக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் இளம்பெண் தனது 5 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண், அதே பகுதியை சேர்ந்த சென்னையில் தனியார் பைக் கம்பெனியில் வேலை செய்து வரும் தனிஷ்குமார்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி தனிஷ்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, தனிஷ்குமாருக்கு இளம்பெண் போன் செய்து, நாம் பாலமதி கோயிலுக்கு சென்று வரலாம் என அழைத்துள்ளார். இதையடுத்து, இருவரும் பாலமதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் அங்குள்ள பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தனிஷ்குமாரிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் உனக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை உள்ளது. அதனால் உன்னை நான் திருமணம் செய்து கொள்ள முடியானது என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனிஷ்குமார், இளம்பெண்ணை கல்லால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த இளம்பெண் ரத்தம் வழிந்தபடியே ஊருக்குள் சென்று அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இளம்பெண் பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிஷ்குமாரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வேலூர் பாலமதி மலையில் திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபர் கைது: ரத்தம் வழிந்தபடி ஓடியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article