குடியாத்தம், ஜூலை 16: குடியாத்தம் அருகே அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் கே.ஜி.எப்.பில் செம்மரம் வெட்ட சென்றதாக ஜவ்வாதுமலையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் இருந்து கர்நாடக மாநிலம், கே.ஜி.எப்.க்கு செம்மரம் வெட்டுவதற்காக சிலர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக அரசு பஸ்சில் செல்வதாக டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று புகார் வந்தது. இதையடுத்து, டிஎஸ்பி சுரேஷ் உத்தரவின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல், குடியாத்தம்- வேலூர் சாலையில் உள்ள மண்டபம் அருகேயும் வாகன சோதனை நடந்தது. அப்போது, அவ்வழியாக வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தினர். பின்னர், போலீசார் பஸ்சில் ஏறி சோதனை நடத்தினர். மேலும், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி குழுவாக சேர்ந்து யாராவது டிக்கெட் எடுத்தார்களா? என கேட்டனர். அதற்கு சம்பந்தப்பட்டவர்களை கண்டக்டர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து 13 பேரில் 3 பேர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். மற்ற 10 பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்களை குடியாத்தம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலம், கே.ஜி.எப்.பில் செம்மரம் வெட்டுவதற்காக ஆயுதங்களுடன் செல்வது தெரியவந்தது.
மேலும், செம்மரம் வெட்ட சென்றவர்களான ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா(26), ராமச்சந்திரன்(35), மற்றொரு ராமச்சந்திரன்(50), ஏழுமலை(30), வெள்ளி(35), ராஜ்குமார்(33), நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(43), மாணிக்கம்(33), சொம்பு மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(29), குமார்(40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்து கோடாரி, கத்தி, ரம்பம் உட்பட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து 10 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post செம்மரம் வெட்ட சென்றதாக ஜவ்வாதுமலையை சேர்ந்த 10 பேர் கைது: தப்பிய 3 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.