இரு நாடுகளுக்கும் மோதல் அதிகரித்துள்ளதால் பதற்றம்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பதிலடி கொடுத்த இந்தியா

3 hours ago 3

ஸ்ரீநகர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் நேற்றிரவு எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். 1990ம் ஆண்டுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். தாக்குதல் நடைபெற்ற இடம், உடனடியாக உதவி கிடைக்க இயலாத பகுதியாகும். அதாவது பஹல்காமில் இருந்து 6 கி.மீ தொலைவில் பைசரன் பள்ளத்தாக்கு இருக்கிறது. இங்கிருந்துதான் புகழ்பெற்ற துலியன் ஏரிக்கு செல்ல முடியும். ஆனால் பஹல்காம் முதல் பைசரன் பள்ளத்தாக்குக்கு போக வாகன வசதிகள் கிடையாது. நடந்தோ, குதிரை மூலமாகவோதான் போக முடியும். இதனை தெரிந்து கொண்டுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லஷ்கர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் கிளையாகும். இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐஎஸ் தொடர்ந்து உதவி செய்து வருவதாக சந்தேகம் இருக்கிறது. இப்படியாக இந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்குமான தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதே நேரம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் இரங்கலை தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களை கண்டிக்கவில்லை. இது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சில ராஜதந்திர ரீதியிலான பதிலடியை இந்தியா கொடுத்தது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள 23 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தததை இடைநிறுத்தியது. இதனால் கோபமடைந்த அந்நாடு, இது அறிவிக்கப்படாத போர் என்று குற்றம் சாட்டியது.

பதிலுக்கு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இருநாட்டு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி மற்றும் அக்னூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில், நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டை இன்று அதிகாலை வரை நீடித்தது. முன்னறிவிப்பு இல்லாத இந்த திடீர் தாக்குதலால் எல்லையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

The post இரு நாடுகளுக்கும் மோதல் அதிகரித்துள்ளதால் பதற்றம்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பதிலடி கொடுத்த இந்தியா appeared first on Dinakaran.

Read Entire Article