*குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் இரவும், பகலும் காவல் இருப்பதாக கலெக்டரிடம் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெரும்படையார் பேசுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் காட்டுப் பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்படுகிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
காட்டுப் பன்றிகளுக்கு இருக்கும் மரியாதை விவசாயிகளுக்கு இல்லை. எனவே ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி அட்டை ஆகியவற்றை காட்டுப் பன்றிகளுக்கு கொடுத்து விடுங்கள். காட்டுப் பன்றியை தற்போது சுடலாம் என உத்தரவு வந்துள்ளது. இது ஒரளவுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் அதை யார் சுடுவார்கள்? அந்த உத்தரவில் திருத்தங்கள், மாற்றங்கள் தேவைப்படுகின்றன. எனவே முதல்வர் வருகையின் போது விவசாயிகள் முதல்வரை சந்தித்துப் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.’’ என்றார். அதற்கு பதிலளித்த கலெக்டர், ‘‘ இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
திருக்குறுங்குடி விவசாயி திருநாவுக்கரசு பேசுகையில், ‘‘ பகலில் குரங்கு, இரவில் காட்டுப் பன்றி என விளை நிலங்களை வனவிலங்குகள் அழித்து வருகின்றன. இதுகுறித்து புகார் செய்தால் வனத்துறை விவசாயிகளை கேவலமாக நடத்துகிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது என தெரியவில்லை. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி பேசுகையில், ‘‘ கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் கடன் பெறும் போது, கடன் தொகையில் 10 சதவீதம் உரமாக வழங்குகின்றனர். ஆனால் உரத் தட்டுப்பாடு காரணமாக சம்பந்தப்பட்ட உரம் கிடைப்பதில்லை. எனவே உரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என்றார். அதற்கு கலெக்டர், ‘‘அந்த உரத்தை வாங்கி விவசாயிக்கு வழங்குமாறு கூட்டுறவுத் துறைக்கு உத்தரவிட்டார்.
சுத்தமல்லி அருகே உள்ள பழவூரைச் சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், ‘‘கேரள கழிவுகளை திருப்பியனுப்பியதற்காக கலெக்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கழிவுகளை மீண்டும் கொண்டு வராத வகையில் செக் போஸ்ட்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.’’ என்றார். இதற்கு பதிலளித்த கலெக்டர் கார்த்திகேயன்,‘‘ கேரள கழிவுகள், சுத்தமல்லி அருகேயும், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய மூன்று இடங்களில் கொட்டப்பட்டிருந்தன.
சுத்தமல்லி அருகே இரவு நேரத்தில் கொட்டிச் சென்றனர். தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் கொட்டிச் சென்ற கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விட்டோம். தமிழ்நாடு அரசு, பசுமை தீர்ப்பாயத்தில் வலுவாக வாதம் வைத்ததால், கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பின்னரும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செக் போஸ்ட்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி, வேளாண்மை அலுவலர் ராமலெட்சுமி உள்ளிட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post இரவும், பகலும் காவல் இருக்கிறோம் நெல்லை மாவட்டத்தில் தொடரும் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் appeared first on Dinakaran.