நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்த எப்ரா சேகர் துபாய் உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தவர். அந்த வேலையை உதறிவிட்டு உள்ளூருக்கு வந்து நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். முட்டை வியாபாரம், இறைச்சிக்கான கோழி வியாபாரம் என திட்டமிட்டு வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும் இவரிடம் கொஞ்சம் பேசினோம். “பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு 10 வருடங்கள் துபாய் உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்த்தேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தபோது எனது சகோதரரின் மகனுக்கு நாட்டுக்கோழி முட்டை தேவைப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நாட்டுக்கோழி முட்டைக்கு அவ்வளவு டிமாண்ட் இருப்பதை அறிந்தேன். இவ்வளவு டிமாண்ட் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை நாமே விற்கலாமே என தோன்றியது. இந்த யோசனை நாட்டுக்கோழி வளர்ப்புக்கு என்னைத் தூண்டியது. உடனே இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் இறங்கினேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆசாரிப்பள்ளம் அனந்தன் நகர் இந்திரா தெருவில் இரண்டே கால் ஏக்கர் தென்னந்தோப்பு குத்தகைக்கு கிடைத்தது. தோப்பில் ஆழ்துளைக் கிணற்றுடன், மின் இணைப்பும் இருந்தது. இதனை சரியாக பயன்படுத்தவேண்டும் என தென்னைகளுக்கு இடையே செவ்வாழை, மட்டி வாழைகளை சாகுபடி செய்தேன். மேலும் இரு இடங்களில் 3 கொட்டகைகள் அமைத்து நாட்டுக்கோழி வளர்த்துவருகிறேன்.
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு கோழிக்குஞ்சுகளை தேர்வு செய்வது எப்படி என முதலில் தெரியவில்லை. பின்னர் பல தேடுதலுக்கு பிறகு சில கிராமப் பகுதிகளில் நாட்டுக்கோழிக் குஞ்சுகள் விற்பனை செய்வதை அறிந்துகொண்டேன். களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் ஒரு மாதம் ஆன நாட்டுகோழிக் குஞ்சுகளை ரூ.120க்கு வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். தற்போது என்னிடம் 400 நாட்டுகோழிகள் உள்ளன. இதில் 50 சேவல், 350 பெட்டைக்கோழிகள். இதுதவிர 30 வாத்துகளும் வளர்த்துவருகிறேன். கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்க்கும்போது 6 மாத காலம் வரை நமக்கு எந்த வகையிலும் வருமானம் கிடைக்காது. அதற்கு செலவுதான் செய்யவேண்டும். 6 மாதத்திற்குப் பிறகு பெட்டைக் கோழிகள் முட்டைகள் போடத் தொடங்கும். அதிலிருந்து நாம் வருமானம் பார்க்க ஆரம்பிக்கலாம்.தற்போது நான் வளர்த்துவரும் கோழிகள் முட்டை போடுகின்றன. தினமும் 200 முட்டைகள் வரை கிடைக்கிறது. எனது பண்ணைக்கு வந்து வாங்குபவர்களுக்கு ஒரு முட்டை ரூ.12 என தருகிறேன். வீட்டிற்கு சென்று கொடுக்கும்போது ஒரு முட்டை ரூ.13. சிலர் எனது செல்போனில் தொடர்பு கொண்டால் நேரடியாக சென்று கொடுக்கிறேன். வாத்து முட்டையை ரூ.14க்கு விற்பனை செய்கிறேன். வீட்டிற்கு சென்று வாத்து முட்டையை கொடுக்கும்போது ஒரு முட்டையின் விலை ரூ.15. அதிகமாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு புரதச்சத்து கிடைப்பதற்கு நாட்டுக்கோழி முட்டையை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
முட்டை வியாபாரம் ஒருபுறம் இருக்க, நாட்டுக்கோழிகளை ஒன்றரை வருடம் வளர்த்து இறைச்சிக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறேன். தற்போது கோழிகள் அனைத்தும் ஒரு வயது கொண்டவையாக உள்ளன. இன்னும் 6 மாதத்தில் அனைத்துக் கோழிகளையும் விற்பனை செய்துவிடுவேன். தற்போது முட்டைகள் மூலம் குஞ்சுகள் பொரிக்க வைத்து, அடுத்த சுற்றுக்கு தயார் செய்கிறேன். தற்சமயம் முட்டையிடும் கோழிகளை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்த பிறகு, இப்போது உற்பத்தி ஆகும் கோழிக்குஞ்சுகள் முட்டையிடத் தொடங்கும். இப்படி செய்வதால், தினமும் தொடர்ச்சியாக முட்டை கிடைக்கும். தினமும் 200 முட்டைகள் கிடைப்பதால், ரூ.2400 வரை தினசரி வருமானம் கிடைக்கும். இதில் ரூ.1000 முதல் ரூ.1200 வரை தீவனம், பராமரிப்பு செலவு ஆகிவிடும். அதுபோக ரூ.1000 முதல் ரூ.1200 வரை வருமானமாக கிடைக்கும். சராசரியாக மாதம் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும். இன்னும் 6 மாதங்களில் கோழிகளை விற்பனை செய்யும்போது ஒரு கிலோ இறைச்சி ரூ.250க்கு விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள். அப்போது எனக்கு கூடுதலான வருமானம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
எப்ரா சேகர்: 90256 54843.
* கோழிகளுக்கு காலை, மாலை என இரு வேளைகளில் தீவனம் வழங்கப்படுகிறது. மக்காசோளம், கருவாடு ஆகியவற்றை அரைத்து தவிடுடன் கலந்து தீவனமாக வழங்கப்படுகிறது. இதுதவிர நெல்லும் தீவனமாக வழங்கப்படுகிறது.
* முட்டையிடும் கோழிகள் சுமார் 900 கிராம் முதல் 1 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். நெல்மணியைத் தீவனமாக கொடுப்பதால் கோழிகளின் உடலில் ெகாழுப்பு படியாது. ஆனால் முட்டையிட்டு முடிந்தவுடன் இறைச்சிக்காக கொடுக்க முடிவு செய்யும்போது நெல் வழங்குவது நிறுத்தப்படும். இதனால் கோழிகளின் உடலில் கொழுப்பு சேரும். 900 கிராம் இருந்த கோழிகள் விற்பனையின்போது 1.400 கி.கிராம் முதல் 1.500 கி.கிராம்
எடையில் இருக்கும்.
* கோழிகளுக்கு சளித்தொந்தரவு அவ்வப்போது ஏற்படும். சளியால் பாதித்துள்ள கோழிகள் வாயைத் திறந்துகொண்டு சுவாசித்தபடி ஒரு இடத்தில் சோர்வாக நிற்கும். இதற்கு இயற்கை மருந்தான ‘கெம்-1’ என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி அளவு கலந்து கோழிகளுக்கு கொடுக்கலாம்.
The post இரட்டை வருமானத்திற்கு இலக்கு… நம்பிக்கை தந்த நாட்டுக்கோழி வளர்ப்பு! appeared first on Dinakaran.