சென்னை,
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த டிச.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பழனிசாமி, வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சூர்யமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள்வமூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், அதனை பொதுக்குழுவின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது.
தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் கிடையாது, எனவே தற்போதைய அ.தி.மு.க கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.