
புதுடெல்லி,
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பயன்படுத்த தடை கோரியும், தங்களுக்கு ஒதுக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் தாக்கல் செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் விசாரணையை நடத்தி வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான வாதத்தை ஏற்று இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் அந்த தடை நீக்கப்பட்டது. விசாரணையை தொடர தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு பச்சைக்கொடி காண்பித்தது.
1968-ம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு விதிகளின் கீழ், கட்சியில் இரு பிரிவினருக்கு இடையே சின்னம் தொடர்பாக ஏதேனும் உரிமை கோரல் இருந்தால் அதை விசாரித்து தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்கலாம் என அந்த விதி தொடர்பான 15-வது பத்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த விதியை பயன்படுத்தி இந்திய தேர்தல் கமிஷன் இதற்கு முன்பு பல கட்சிகளின் பிரச்சினையை முடித்து வைத்துள்ளது. இதன்படி இரட்டை இலை சின்னம் வழக்கிலும் தேர்தல் கமிஷன் ஏதாவது முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் 15-வது பத்தியின் ஷரத்துகள் அ.தி.மு.க. விவகாரத்துக்கு பொருந்தாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகிறார்கள். ஏனென்றால் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் 2,500-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து இருப்பதால் கட்சியில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்படுகிறது.
இந்த நிலையில், சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் இறுதி விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.