இரட்டிப்பு பணம் கொடுப்பதாக ரூ500 கோடி வரை வசூல்; மோசடி வழக்கில் கைதான டிரைவர் வங்கி கணக்கில் ரூ84 லட்சம் சிக்கியது: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்

2 days ago 1

சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி ரூ500 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான டிரைவர் வங்கி கணக்கிலிருந்து ரூ84 லட்சம் சிக்கியுள்ளது. சேலம் அம்மாபேட்டையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை வேலூரை சேர்ந்த விஜயபானு என்பவர் நடத்தி வந்தார். இதில் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி சுமார் ரூ500 கோடி வரை மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் அதிரடியாக மண்டபத்தில் சோதனை நடத்தினர். இதில் ரூ12.65 கோடி பணம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் நிலம் வாங்கியதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர், டிரைவர் சையத் முகமது ஆகிய 4 பேரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை டெபாசிட் செய்துள்ளதால் அவர்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறும் வகையில் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம், கடந்த 3 நாட்களில் மட்டும் 119 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் மொத்தம் 1 கோடியே 77 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதற்கிடையில் ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. அதில் பேசும் பெண் ஒருவர், யாரையும் புகார் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புகார்கள் தொடர்ந்து வந்தால் அம்மாவை ஜாமீனில் வெளியே எடுக்க முடியாது.

பணமும் கிடைக்காது. எனவே, புகார் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என ஏஜென்டுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன் காரணமாகவே புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் கைதான 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் கைதான விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது ஆகிய நான்கு பேரும் ஜாமீன் கேட்டு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் மதுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாகவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் வாங்கிய பணத்தில் நிலங்களாக வாங்கி குவித்துள்ள தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் கைதான பாஸ்கர் என்பவர் நில புரோக்கராக செயல்பட்டு பெத்தநாயக்கபாளையம் பகுதியில் பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அவற்றை எல்லாம் முடக்குவதற்கான நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைதான டிரைவர் சையத் முகமதின் வங்கி கணக்கில் மட்டும் 84 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனை முடக்குவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா என்ற காவல்நிலையத்தில் கள்ளநேட்டு மற்றும் மோசடி செய்ததாக விஜயபானு மீது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்தால்தான் பொதுமக்களிடம் மோசடி செய்த பணம் எங்கு இருக்கிறது, நிலங்களாக எங்கெல்லாம் வாங்கி உள்ளனர் என தெரியவரும். அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையின் நிர்வாகிகளான செந்தில், அவரது மனைவி ஜான்சி ஆகியோருக்கும் இந்த மோசடி விவகாரத்தில் முக்கிய பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

‘ஐபிஎஸ்’ என கூறி மோசடி: விஜயபானு மீது குவியும் பழைய புகார்கள்
பணம் இரட்டிப்பு மோசடி கும்பலின் தலைவியான விஜயபானு மீது, வேலூரில் திருட்டு வழக்கு பாய்ந்தது தெரியவந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு, திருட்டு வழக்கு ஒன்றில் கைதான விஜயபானு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, சிறையில் வார்டனாக வேலை பார்த்து வந்த விஜயா என்பவரிடம், தான் டெல்லியில் சிறப்பு தொழில் பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகவும், வேலூர் சிறையில் நடக்கும் ஊழலை கண்டுபிடிப்பதற்காகத்தான், திட்டமிட்டு சிறைக்குள் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதேபோல், சிறையில் பணி புரிந்த விவேக்சனா என்ற பெண் போலீசிடமும், தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்றே காட்டிக் கொண்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னும், விவேக்சனா மற்றும் விஜயா ஆகியோரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

அப்போது, வார்டன் விஜயாவின் மகள் அஜிதா(23)விடம், வேலூர் சிஎம்சியில் ஒரு பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி உதவி கேட்டுள்ளார். அதை நம்பிய அஜிதா, தன்னுடைய 22 பவுன் நகையை தந்தார். அந்த நகையை உதவியாளர்களான மதிவாணன், வெங்கடேசன் ஆகியோர் மூலம், வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்து, பணத்தை பெற்றுள்ளார்.  மேலும், அஜிதாவிடம், தான் அன்னை தெரசா ெதாண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

தன்னுடைய தொண்டு நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் நிரந்தர வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கி தராததோடு, 22 பவுன் நகையையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்த கடந்த 2012 ஜூன் 10ம் தேதி, வேலூர் எஸ்பியிடம் அஜிதா புகார் அளித்தார். அதன் பேரில், 420 பிரிவின் கீழ், விஜயபானுவின் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது தெரியவந்துள்ளது.

The post இரட்டிப்பு பணம் கொடுப்பதாக ரூ500 கோடி வரை வசூல்; மோசடி வழக்கில் கைதான டிரைவர் வங்கி கணக்கில் ரூ84 லட்சம் சிக்கியது: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article