அதிமுக-பாஜ கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தபடி ‘இது மிகவும் இயல்பான கூட்டணி. 1998ம் ஆண்டு முதல் அதிமுகவும், பாஜவும் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தலில் கூட்டணி அமைப்பது என்பது, ஒவ்வொரு கட்சிக்குமான தனிப்பட்ட முடிவு. ஆனால் கூட்டணி கணக்குகளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மக்கள் மன்றத்தில், இவர்களின் ‘இயல்பு’ என்பது கேலிக்கூத்தாகவே மாறி நிற்கிறது.
முதல்முறையாக அதிமுக-பாஜ கூட்டணி 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உருவானது. அந்த தேர்தலில் பாஜ 24 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. அப்போது கிடைத்த வெற்றியில் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். இந்த ஆட்சிக்கான ஆதரவை திரும்ப பெற்று, கவிழ்வதற்கு காரணமாக இருந்தது அதிமுக. அதிமுக கூட்டணியின் போது ‘பல இரவுகளை தூக்கமின்றி கழித்தேன்’ என்று வாஜ்பாயும், என்னுடைய வாழ்நாளில் இனி ஒரு போதும் பாஜவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஜெயலலிதாவும் கூறியது அன்றைய காலகட்டத்தில் பரபரப்பின் உச்சமானது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூட ‘லேடியா? மோடியா? என்று ஜெயலலிதா எழுப்பிய கேள்வி பாஜவை புறம் தள்ளியது. இப்படிப்பட்ட சூழலில் தான், 12 ஆண்டுகள் கழித்து, அதுவும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-பாஜ கூட்டணி உருவானது. அதுவும் முதல்வர் பதவியை தக்கவைப்பதற்கான நிர்ப்பந்தம், எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்ற ஆக்ரோஷம் பாஜவிற்கும் இருந்ததால் மட்டுமே கூட்டணி தொடர்ந்தது. 2021ல் இந்த கூட்டணிக்கு கிடைத்த தோல்வியும், பாஜவின் அடக்குமுறைகளும் ஒரு கட்டத்தில் கூட்டணியை முறிக்கும் அளவுக்கு, அதிமுகவை கொண்டு சென்றது.
இதற்கடுத்து இருகட்சி நிர்வாகிகளும் நடத்திய சொற்போரும், விவாதங்களும் இன்னும் மக்களின் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ‘இயல்பான கூட்டணி’ என்ற முகமூடியை இருவரும் அணிந்துள்ளனர். இவர்கள் கூட்டணி அமைத்தது தொடர்பான சர்ச்சைகள், மக்கள் மன்றத்தில் விவாதப் பொருளாகவும் மாறி நிற்கிறது. ஆனால், இதற்கான பின்னணியை தனது அறிக்கையின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் தமிழக முதல்வர். ‘இன்றைய அதிமுக பொறுப்பாளர்களின் உறவினர்கள் குடும்பங்களை சுற்றி, மத்திய புலனாய்வுத்துறை இரண்டு சோதனைகள் நடத்தியது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பாஜ தலைமையை நோக்கி ஓடினார்கள்.
அதையே நிபந்தனையாக வைத்து, கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். அதிமுக-பாஜ கூட்டணியை உறுதி செய்ததே ஊழல் தான் என்பதை உணர்ந்தவர்கள் நமது மக்கள். இரண்டு ரெய்டு நடந்தவுடன், அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள்’ என்று அம்பலமாக்கியுள்ளார். ‘‘தமிழ்நிலத்தில் தனது சதித்திட்டங்களை பாஜ நிறைவேற்றப் பார்க்கிறது. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள். சுயமரியாதை இன்றி டில்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்க பார்க்கின்றனர். இந்த துரோக கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்’’ என்பதும் முதல்வரின் நம்பிக்கை. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் இந்த நம்பிக்ைகக்கு தமிழக மக்கள் உயிரூட்டுவார்கள் என்பதும் நிதர்சனம்.
The post இயல்பு அல்ல…கேலிக்கூத்து appeared first on Dinakaran.