இயற்கையைப் பாதுகாக்கும் தேசியப் பசுமைப் படை

3 months ago 19

சமூக, பொருளாதார, அரசியல் என அனைத்துமே சூழலியல் சார்ந்து இருப்பதை இளம்பிராயத்திலேயே மாணவர்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு விழிப்புணர்வு பெறவும், சூழலியல் பாதுகாப்புத் திறன்கள் பெறவும் பின்வரும் அமைப்புகள் பள்ளிகளில் திறம்பட செயலாற்றி வருகின்றன. தேசியப் பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் இரண்டுமே ஒரே வகையான அமைப்பு தான். ஆனால் அழைக்கப்படும் பெயரில்தான் வித்தியாசம் உள்ளது. தேசியப் பசுமைப் படைக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. சுற்றுச்சூழல் மன்றத்திற்கு மாநிலஅரசு நிதியுதவி வழங்குகிறது.

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இம் மன்றங்கள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. 6,7,8,9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இந்த படையில் உறுப்பினராகச் சேரமுடியும். ஒரு பள்ளிக்கு ஒரு குழு வீதம் 40 முதல் 50 வரையிலான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

நிலம், நீர், காற்று, வான், நெருப்பு என அனைத்தும் மாசடைவதை விழிப்புணர்வு மூலமாகப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் ஐந்து குழுக்களாக மாணவர்களைப் பிரித்து அந்தந்தக் குழுவுக்குரிய செயல்பாடுகளை, மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்து முடிப்பர். மேலும் இக்குழுக்களுக்கு நீலம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், பழுப்பு என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

நீலக்குழு: இக்குழு நீர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்கிறது. மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சிக்கனம், கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் மாசடைதலினால் ஏற்படும் பாதிப்புகள், ரசாயன ஆலைக் கழிவுகள் ஆற்றில் சேர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உலக தண்ணீர் தினம், உலக ஈரநிலங்கள் பாதுகாப்பு தினம், இயற்கை வளங்கள் தினம் போன்ற நாட்களில் விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்கிறது.

பச்சைக்குழு: இக்குழு நில மேலாண்மைப் பணிகளை மேற்கொள்கிறது. மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடுதல், பராமரித்தல், செயற்கை உரத்தின் தீமைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறுதல், இயற்கை உரங்களான மண்புழு உரம், பசுந்தாள் உரம், பஞ்ச கவ்யா குறித்து செயல்முறை விளக்கம் அளித்தல், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம் அமைத்தல், உலக பூமிதினம், உலக வன நாள் போன்ற நாட்களில் விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளல் போன்றவற்றை மேற்கொள்கிறது.

ஆரஞ்சுக்குழு: இக்குழு காற்று மேலாண்மைப் பணிகளை மேற்கொள்கிறது. காற்று மாசுவினால் மக்கள் அடையும் நோய்ப் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தல், வாகனப் புகை, தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல், போகி, தீபாவளி பண்டிகை நாட்களில் குப்பைகளை எரிப்பதைத் தடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தல், வாகனங்களால் உண்டாகும் புகை மாசுவைக் குறைக்க மிதிவண்டிப் பயணம், நடை பயணம், பொதுப் பேருந்துப் பயணத்தை ஊக்குவித்தல், உலக ஓசோன் தினம், இயற்கைப் பாதுகாப்பு தினம், தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் போன்ற நாட்களில் தொடர்பான செயல்பாடுகள் செய்தல் போன்றவற்றை கையாள்கிறது.

மஞ்சள்குழு: இக்குழு ஆற்றல் மேலாண்மையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் (சூரிய சக்தி, காற்றாலை சக்தி) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து்தல், குண்டு பல்புகள் பயன்பாட்டினை குறைத்து சிஎப்எல்,எல்இடி பல்புகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல், மின் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தல், சூரிய அடுப்பு, சாண எரிவாயு அடுப்பு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல், உலக ஆற்றல் தினம், தேசிய எரிசக்தி தினம் போன்ற நாட்களில் விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்கிறது.

பழுப்புக்குழு: இக்குழு கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்கிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பை கையாளும் முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல், பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக சேகரித்து உள்ளாட்சிகளில் ஒப்படைத்தல், கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் பாலிதீன் இல்லா நிலையை உருவாக்குதல், தமிழ்நாடு அரசின் உன்னத திட்டமான மஞ்சப்பை திட்டம் செயல்படுத்துதல், உலக சுற்றுச்சூழல் தினம், உலக பாலைவனத் தடுப்பு தினம் போன்ற நாட்களில் விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொள்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலாக 1998ஆம் ஆண்டு சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டன. தற்போது தேசியப் பசுமைப் படை மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் 8000 பசுமைப் படை சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டு 4 லட்சம் மாணாக்கர்கள் பசுமைப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் சூழல் மன்றங்கள் செயல்பாடுகளை பார்த்து 2002ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 250 தேசியப் பசுமைப் படைகள் பள்ளியளவில் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

தேசியப் பசுமைப் படையின் குறிக்கோள்கள்

‘‘பசுமை எங்கே வளமை அங்கே” என்பதுதான் தேசியப் பசுமைப்படையின் பிரதான குறிக்கோள் ஆகும். அடுத்து இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் இத்தகைய ஈடு இணையில்லா இனிய பணியில் இளைய சமுதாயத்தை இணைப்பது. மாசில்லா பூமியை உருவாக்குவோம்… அனைத்து உயிரினமும் மகிழ்ச்சியாக வாழ வழிவகுப்போம் என்பது போன்றவையாகும்.

The post இயற்கையைப் பாதுகாக்கும் தேசியப் பசுமைப் படை appeared first on Dinakaran.

Read Entire Article