இயற்கை வேளாண்மையை பரவலாக்கம் செய்திட ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு

5 hours ago 2

தமிழக சட்டசபையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த நிலையில் இயற்கை வேளாண்மையை பரவலாக்கம் செய்திடும் விதமாக தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இயற்கை வேளாண்மையில், ரசாயனக் கலப்பு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த, வயல்களில் கிடைக்கக்கூடிய வளங்களான பயிர்கள், கால்நடைகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றின் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஒருங்கிணைத்து விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இயற்கை வேளாண்மையை பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மொத்தம் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.

இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைத்து 7,500 உழவர்கள் பயனடையும் வகையில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் இரண்டாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்கள் எளிதில் நுகர்வோருக்குக் கிடைக்கச்செய்யும் வகையில், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் பொருட்களை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் சந்தைப்படுத்த, உரிய வசதிகள் செய்து தரப்படும்.

உழவர்களிடையே உயிர்ம வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கம் செய்திட, 37 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த, 38,600 மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளுக்குக் "கண்டுணர் சுற்றுலா" அழைத்துச் செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு வேளாண் விளைபொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி, ஏற்றுமதி செய்ய, எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு, முழு மானியம் வழங்கப்படும்.

உயிர்ம வேளாண் நிலையை அடைந்த உழவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், உயிர்ம வேளாண்மை சான்றிதழ் பெற, உழவர்கள் பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்து, இலவசமாகப் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article