விவசாயி கணேசமூர்த்தியின் வீடு சென்னையின் ஓர் அங்கமாக விளங்கும் பூந்தமல்லியில் இருக்கிறது. இவரது விவசாய நிலம் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சிக்கு அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தில் அமைந்திருக்கிறது. விவசாயம் செய்வதற்காகவே வயல் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி வருகிறார். இயற்கை இடுபொருட்கள் பயன்பாடு, பாரம்பரிய நெல் சாகுபடி என ஆத்மார்த்தமான விவசாயத்தில் ஈடுபடுவதால் அருகில் இருந்து பார்ப்பதுதானே சரியாக இருக்கும் என அதற்கு விளக்கம் தரும் கணேசமூர்த்தியை அவரது வயலில் வைத்து சந்தித்தோம். சிவன்சம்பா நெற்பயிரை அறுவடை செய்து கொண்டிருந்த கணேசமூர்த்தி எங்களை பார்த்ததும் வரவேற்றார். வயல்வெளியைச் சுற்றிக் காண்பித்தவாறே எங்களிடம் பேச ஆரம்பித்தார்.
“ பப்ளிக் ஹெல்த் டிப்பார்ட்மென்டில் லேப் டெக்னிசியனாக வேலை செய்தபோதிலும், விவசாயத்தை விடாமல் செய்துவந்தேன். இன்று, நேற்றல்ல.. 1983ல் இருந்து விவசாயம் செய்து வருகிறேன். இதனால் விவசாயத்தில் அனைத்து வேலைகளும் நன்றாக தெரியும். இன்னும் சொல்லப்போனால், பூந்தமல்லிக்கு அருகே உள்ள கிராமத்தில்தான் வீடு என்பதால் அங்கேயே விவசாயம் பார்த்தேன். நாங்கள் விவசாயம் செய்து வந்த இடமெல்லாம் தற்போது நகரமயமாகிவிட்டது. இதனால் திருவள்ளூரில் நான்கு ஏக்கரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறேன்.ஆரம்பத்தில் ஒரு போகம் நெல் என்றால் மறுபோகம் வேர்க்கடலை என மாற்றி மாற்றி பயிரிடுவேன். அதுபோக, நிலத்தில் எப்போதுமே கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்களும் இருக்கும். எனது மனைவியின் தந்தை மூலம்தான் எனக்கு விவசாயம் அறிமுகம். அவரின் ஆர்வத்தைப் பார்த்துதான் விவசாயத்திற்குள் வந்தேன். 40 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறேன். அப்போதெல்லாம் செமி ஆர்கானிக் முறையில்தான் விவசாயம் செய்து வந்தேன். அதாவது அடி உரமாக மட்டும் யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் கொடுத்துவிட்டு பயிர் வளர வளர பூச்சித் தொல்லைகள் இருந்தால் வயலின் மேல் வேப்பெண்ணெய் தெளிப்பேன். பெரும்பாலும் அதிகப்படியான செயற்கை உரம் கொடுக்காததால் பெரியளவில் நோய் தாக்குதல் இருக்காது. அப்படியே நோய், பூச்சி தாக்குதல்கள் வந்தாலும் கூட வேப்பெண்ணெய் மட்டுமே மருந்து.
இந்த முறையில் விவசாயம் செய்து வந்தபோது ஒரு கட்டத்தில் நம்மாழ்வார், பாமயன் போன்றவர்களின் இயற்கை விவசாயம் சார்ந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு பாரம்பரிய விதைகள், இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேன். அதைத் தொடர்ந்து எனது நிலத்தில் 2 ஏக்கரில் சிவன் சம்பா, 1 ஏக்கரில் சீரக சம்பா, 50 சென்டில் கருப்பு கவுனி பயிரிட்டு இருக்கிறேன். மீதமுள்ள இடத்தில் கிச்சலி சம்பா பயிரிட்டிருக்கிறேன். இயற்கை விவசாயம் செய்வதற்கு பாரம்பரிய விதைகளை அரசு விதைப்பண்ணையிடம் இருந்தே வாங்கினேன். தற்போது அந்த அரசு விதைப்பண்ணைக்காகவே இரண்டு ஏக்கரில் சிவன்சம்பா விதைத்து விதைகளை அவர்களிடமே விற்கப்போகிறேன்.இயற்கை முறை விவசாயத்தில் அடி உரம் நல்ல முறையில் கொடுக்க வேண்டும். அப்போதுதான், மண்ணில் சத்துக்கள் அதிகமாகும். முதலில் விதைக்க வேண்டிய நிலத்தை நன்றாக நான்கு முறை உழ வேண்டும். முதல் உழவின்போது ஒரு ஏக்கருக்கு ஒரு ட்ராக்டர் ஊட்டமேற்றிய தொழுஉரத்தைக் கொட்டி அடுத்தடுத்து உழ வேண்டும். அதேபோல், கடைசி உழவின்போது மண்புழு உரம் மற்றும் வேப்பம்புண்ணாக்கை ஏக்கருக்கு 50 கிலோ வீதம் கொட்டி கடைசி உழவு ஓட்ட வேண்டும். அதன்பின், நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்து நடத் தொடங்கலாம். இப்படித்தான் எனது வயலுக்கு அடி உரம் கொடுத்து நாற்றுகளை நடுவேன். எனது நிலத்தில் போர்வெல் அமைத்திருக்கிறேன். அதன் மூலம், வயலுக்குத் தேவையான தண்ணீர் பாய்ச்சுகிறேன். அதுபோக வாரம் ஒருமுறை வயலுக்கு ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு கொடுக்கிறேன். அதாவது, மீன் அமிலம், பத்திலை கரைசல், ஜீவாமிர்தம், பழக்கரைசல் போன்ற கரைசல்களை நானே தயாரிக்கிறேன். இந்த கரைசல்களை வாரம் ஒருமுறை பாசனம் மூலம் பயிர்களுக்கு விடுகிறேன். நூறு லிட்டர் தண்ணீரில் 3 முதல் 4 லிட்டர் கரைசலை கலந்து அந்த கரைசல் கலந்த தண்ணீரை வயலுக்குச் செல்லும் நீரோடு கலந்து விடுவேன். இப்படி இயற்கை முறை கரைசலோடு வயலுக்கு நீர் பாய்ச்சுவதால் பெரும்பான்மையாக எந்த விதமான பூச்சித் தொல்லையும் வராது. அதே சமயம் இந்த கரைசல்கள் அனைத்தும் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகின்றன. இதனால் மகசூலும் அதிகளவில் கிடைக்கிறது. இந்த முறையில் விளைகிற பயிர்களில் இருந்து மகசூல் எடுத்து பெரும்பகுதியை அரசு விதைப் பண்ணைக்கே விதை நெல்லாக விற்றுவருகிறேன்.
ஆரம்பத்தில் இயற்கை முறை விவசாயத்தைத் தொடங்கும்போது ஏக்கருக்கு 12 மூட்டை மகசூல் கிடைத்தது. ஒரு மூட்டை என்பது 75 கிலோ எடை கொண்டது. அந்த வகையில் ஒரு ஏக்கருக்கு 900 கிலோ தான் மகசூலாக கிடைக்கும். அடுத்தடுத்த பட்டங்களில் 12 மூட்டை, 15 மூட்டையாக என கூடுதல் கிடைத்தது. தற்போது கடைசி அறுவடையில் ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை அறுவடை செய்தேன். அதாவது இயற்கை விவசாயத்தின் மூலம் மண்ணை விவசாயத்திற்கு நன்கு பழக்கப்படுத்தினால் மகசூலும் அதிகமாகிக்கொண்டே போகும். அடுத்த அறுவடையில் இன்னும் அதிகமாக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அதே சமயம் மண்ணும் சத்து மிகுந்ததாக மாறி, விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றம் பெறுகிறது. இந்த முறையில் விவசாயம் செய்யும்போது ஏக்கருக்கு 12 ஆயிரம் வரைதான் செலவாகிறது. விதைநெல், உழவு, மண்புழு உரம் என அனைத்துமே அரசு வேளாண் அலுவலகத்தின் மூலம் மானியத்தில் வாங்குவதால் செலவும் வெகுவாக குறைகிறது. விதை நெல்லை கிலோ ரூ.30க்கு விற்றால் கூட ஏக்கருக்கு ரூ.45000 வருமானமாக கிடைக்கும். வெளியில் விற்றால் கிடைக்கும் விலையை விட அரசு விதைப்பண்ணையில் கூடுதல் விலையில் கொள்முதல் செய்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு 35ல் இருந்து 40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. இயற்கை முறையில் விளைவித்த பொருட்களுக்கு இந்த லாபம் கிடைப் பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதேபோல், நான் விளைவித்த அரிசி இன்னொரு விவசாயிக்கு விதைநெல்லாக போவதும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார் கணேசமூர்த்தி.
தொடர்புக்கு:
கணேசமூர்த்தி: 98418 24939.
*நெல் சாகுபடி செய்தது போக மீதமுள்ள 15 சென்ட் நிலத்தில் ஐந்தடுக்கு முறையில் வாழை, பப்பாளி, வெண்டை, அவரை, உளுந்து ஆகிய பயிர்கள் பயிரிடப்படுகிறது.
*ஊட்டமேற்றிய தொழுஉரம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ், பேக்டீரியா, ரைசோபியம், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி, வேம், மீன் அமிலம் போன்றவற்றை 2 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு அதனை ஒரு ட்ராக்டர் தொழுஉரத்தோடு மேலும் கீழுமாக நன்றாக கலந்து 15 நாட்கள் நிழலில் வைத்து அதன்பிறகு பயன்படுத்த வேண்டும். இப்படி தயாரிக்கப்பட்ட உரத்தை உழவின்போது நிலத்தில் கொட்டி உழுதால் மண்வளமும் பயிர்வளமும் நன்றாக இருக்கும்.
The post இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி! appeared first on Dinakaran.