
சென்னை,
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் கூட்டணி இணைந்துள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு 'கேங்கர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதில் கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி நெறுங்கி வருவதால், பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய சுந்தர் சி, "தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்கள். முதலில் தனக்குப் பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள். இரண்டாவது மக்களுக்கு பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள். மூன்றாவது ஹீரோவிற்கு பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள். நான் அதில் இரண்டாவது வகை. மக்களுக்கு பிடித்த படங்களை எடுக்கிறவன். என்னை மாதிரியான இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றியை அடைய முடியாது" என்றார்.
மேலும் வடிவேலு குறித்து பேசிய சுந்தர்.சி, "நானும், வடிவேல் சாரும் இணைந்து கிட்டதட்ட 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறோம். நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார்தான். இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றியது இயக்குனராக இல்லை ஒரு ரசிகனாக தான்" என்று தெரிவித்துள்ளார்.