
இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ' சென்ட்ரல்' திரைப்படத்தில் 'காக்கா முட்டை' விக்னேஷ், இயக்குநர் பேரரசு , 'சித்தா' தர்ஷன், 'ஆறு' பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இலா இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வியாப்பியான் தேவராஜ், சதா குமரகுரு , தமிழ் சிவலிங்கம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் 'சென்ட்ரல்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவியின் காதலும், காதலுக்காக நடைபெறும் ஆணவ கொலை தொடர்பானவையாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
படத்தின் டீசரை தேசிய விருது பெற்ற இயக்குநரான சீனு ராமசாமி, நடிகர் வெற்றி மற்றும் இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான பேரரசு முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சென்ட்ரல்' திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது.