இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற வடமாநில இளம்பெண் கைது: நவீன ஆடை, நகையுடன் ரீல்ஸ் பதிவிட்டு கல்லூரி மாணவர்களையும் வசமாக்கினார்

9 hours ago 2


பல்லாவரம்: பல்லாவரம் அருகே 3 கிலோ கஞ்சாவுடன் வடமாநில இளம்பெண் கைது செய்யப்பட்டார். திரிசூலம் ரயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் பல்லாவரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக கையில் பெரிய பையுடன் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளம்பெண்ணை கைது செய்து, பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கைது செய்யப்பட்ட இளம்பெண் திரிபுரா மாநிலம், உதைப்பூர் பகுதியை சேர்ந்த பாயல்தாஸ் (25) என்பதும், இவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மாதத்திற்கு நான்கு முறை மட்டும் இவர், திரிபுராவில் இருந்து மொத்தமாக 5 கிலோ வரை கஞ்சாவை வாங்கி வந்து, அதனை ரயில் மூலம் சென்னை புறநகர் பகுதிக்கு கடத்திக்கொண்டு வந்து, சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து, தனது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடத்தி வரும் கஞ்சாவை எளிதாக விற்பனை செய்வதற்காகவே சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தனது பெயரில் ஆரம்பித்துள்ளார். அதில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, தான் திருமணம் ஆகாத இளம்பெண் என்றும், கல்லூரியில் படித்து வருவதாகவும் பதிவு செய்துள்ளார். இதை பார்த்து பல இளைஞர்கள், அவருக்கு பிரண்ட்ஸ் ரிக்கொஸ்ட் அனுப்பியபோது, அந்த இளைஞர்களின் செல்போன் நம்பரை கேட்டு வாங்கி, அவர்களிடம் நண்பர் போல் பழகி, தனது கஞ்சா விற்பனைக்கு அவர்களை பயன்படுத்திக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

ஒரு கிலோ கஞ்சாவை திரிபுராவில் இருந்து 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வரும் பாயல்தாஸ், அதனை தனது இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். அதில் அவருக்கு வருமானம் கொட்டத் தொடங்கியது. அதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர், இளம்பெண் என்பதால் போலீசாருக்கு தன் மீது சந்தேகம் வராது என்று துணிந்து கடந்த 3 ஆண்டுகளாக இப்படி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், இதுவரை ஒருமுறை கூட போலீசில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் கஞ்சாவை கடத்தி வரும் பாயல்தாஸ், சென்னையில் கஞ்சாவை விற்பனை செய்த பிறகு, விமானம் மூலம் மீண்டும் திரிபுரா மாநிலத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி, கஞ்சா மூலம் கிடைத்த பணத்தில் வகை வகையாக ஆடைகள், காலணிகள், நகைகள் அணிந்து கொண்டு, இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு பெரிய இடத்துப்பெண் போன்று ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

வீடுகளில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல்
அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் பரணிநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அயனாவரம் சபாபதி தெருவில் உள்ள வீட்டில் சோதனை செய்தபோது, குட்கா பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக காவலாளி ராம்பாபு (39) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், வில்லிவாக்கம் சிவன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் இருந்தும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வில்லிவாக்கம் ஜெகநாதன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (50) என்பவரையும் கைது செய்தனர். மொத்தம் 25 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற வடமாநில இளம்பெண் கைது: நவீன ஆடை, நகையுடன் ரீல்ஸ் பதிவிட்டு கல்லூரி மாணவர்களையும் வசமாக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article