
சென்னை,
சென்னை திரிசூலம் ரெயில்வே கேட் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் திரிபுரா மாநிலம் உதய்பூரை சேர்ந்த பாயல் தாஸ் என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக பாயல் தாஸ் சென்னையில் தங்கியிருந்து கஞ்சா கடத்தி வந்துள்ளார்.
அதோடு, இன்ஸ்டாகிராமில் இளைஞர்களுக்கு காதல் வலை வீசி, அவர்களில் சிலரை கஞ்சா வியாபாரிகளாக மாற்றியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட பாயல் தாஸை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த போலீசார், இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.