இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் சமீபத்தில் 'இந்தியன்-2' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து தனது 234-வது படமான'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 3' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இதனை தொடர்ந்து கமலின் 235-வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குனர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போதுவரை வெளியாகவில்லை.
கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளதாகவும், ஆக்சன் படமாக உருவாக உள்ளதாகவும் அன்பறிவ் சகோதரர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கமல் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புது புகைப்படத்தை பகிர்ந்து, "குழந்தை கையுறையுடன் எனது புதிய ஸ்கிரிப்ட்டை கையாண்டு வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமல் தற்போது ஏ.ஐ தொழில்நுட்ப படிப்பிற்காக அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படங்களைத் தவிர்த்து தெலுங்கில் 'கல்கி 2898 ஏ.டி. 2' படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.