
சேலம்,
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக இளம்பெண் ஒருவர் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே இளைஞர் ஒருவர் வந்து நின்றார். அந்த கல்லூரி மாணவியிடம் இளைஞர் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கல்லூரி மாணவியும், இளைஞரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்து உள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இளைஞர், பேருந்து நிலையம் என்றும் பார்க்காமல் கல்லூரி மாணவியில் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த மாணவி ரத்தம் வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றனர். பின்னர் அந்த இளைஞரை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த இளைஞர் அவரது கை மற்றும் கழுத்து பகுதியில் தன்னைத்தானே அறுத்துக்கொண்டார்.
இதனால் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கல்லூரி மாணவி மற்றும் இளைஞரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியது சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரியன் ( 21) என்று தெரியவந்துள்ளது. மேலும் காதல் விவகாரத்தில் தான் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது என்றும், குறிப்பாக கல்லூரி மாணவி பிரியா( 22) தன்னுடன் ஒரு வயது சிறியவரான உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியதாலேயே இளைஞர் கத்தியால் குத்தியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது கத்தியால் குத்திய இளைஞர் மோகனபிரியனுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கல்லூரி மாணவியின் அறிமுகம் கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் மாறி மாறி இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாக விரும்புவதாக கூறி காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல நேரில் பார்க்க வேண்டும் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே கல்லூரி மாணவிக்கு மோகனபிரியன் ஐடிஐ மட்டும் தான் படித்திருக்கிறார் என்ற விஷயம் தெரியவந்திருக்கிறது. மேலும் பிறந்த நாளை கேட்ட போது, தன்னுடன் மோகனபிரியன் ஒரு வயது சிறியவர் என்பது கேட்டவுடன் சூர்யாவிற்கு தூக்கி வாரி போட்டுள்ளது. தன்னுடன் ஒரு வயது குறைந்தவருடன் காதலிப்பதா என மனதிற்குள் சஞ்சலம் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவி காதலை கைவிட நினைத்துள்ளார். மேலும் வீட்டில் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்ததால் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் கல்லூரி மாணவி.
இந்த நிலையில் தான் இன்று சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவியுடன் மோகனபிரியன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது கல்லூரி மாணவி விடாப்பிடியாக உன்னை காதலிக்க முடியாது நீ என்னை விட சிறியவன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.