டெல்லி: 1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை தேடிதந்த வீரர்களுக்கு வீரவணக்கம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளனர். 53 ஆண்டுகளுக்கு முன்னால், கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோ மீட்டர் தாண்டி வந்து, தனது சொந்த குடிமக்களாகிய வங்காளிகளைப் படுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம். ஒரே நாட்டை ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும்கூட மொழியாலும் இனத்தாலும் நிலத்தாலும் பண்பாட்டாலும் வெவ்வேறானவர்கள் என்ற பாகுபாடே இந்தப் படுகொலைக்கு அடித்தளம். அப்படிக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மட்டுமே ஐந்து லட்சத்துக்கும் மேல்.
சம உரிமையற்ற நாட்டில் விடுதலைக்காகச் சமர் புரிந்த வங்க மக்களுடன் இணைந்து போரிட்டு, அவர்களுக்கான விடுதலையையும் பெற்றுத்தந்தது இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய நடவடிக்கையின் வெற்றிக்கொண்டாட்ட நாளே( டிசம்பர் 16, 1971) விஜய் திவாஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் திவாஸ் நாளான இன்று இந்தியாவிற்கு வெற்றியை தேடிதந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது;
இன்று, விஜய் திவாஸ் நாள், 1971 இல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம் மற்றும் தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதியானது நமது தேசத்தைப் பாதுகாத்து நமக்குப் பெருமை சேர்த்தது. இந்த நாள் அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் தியாகங்கள் தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும் மற்றும் நமது தேசத்தின் வரலாற்றில் ஆழமாக பதிந்திருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1971-ம் ஆண்டு போரின் போது அடங்காத துணிச்சலை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த நமது வீர வீராங்கனைகளுக்கு விஜய் திவாஸ் அன்று வீரவணக்கம் செலுத்துகிறேன். ஒரு நன்றியுள்ள தேசம் நமது துணிச்சலான இதயங்களின் இறுதி தியாகத்தை நினைவுகூர்கிறது, அவர்களின் கதைகள் ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கும் மற்றும் தேசிய பெருமைக்கு ஆதாரமாக இருக்கும். இவ்வாறு குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
The post இன்று விஜய் திவாஸ்.. 1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை தேடிதந்த வீரர்களுக்கு வீரவணக்கம்: குடியரசுத் தலைவர், பிரதமர் புகழாரம்!! appeared first on Dinakaran.