இன்று மகரவிளக்கு பூஜை சபரிமலையில் 1.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: நெரிசலை தவிர்க்க கட்டுப்பாடுகள்

4 months ago 12

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று நடைபெறும் மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலையில் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கிய மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காத்திருக்கும் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் இன்று நடைபெறுகிறது. மகரஜோதியை தரிசிப்பதற்காக பக்தர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே பாண்டித்தாவளம் அப்பாச்சி மேடு, சரங்குத்தி, புல்மேடு உள்பட பல்வேறு இடங்களில் குடில்கள் கட்டி தங்கியுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். மகரஜோதியை முன்னிட்டு நெரிசல் ஏற்படாமல் இருக்க பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணி முதல் நிலக்கல்லில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலை 10 மணி வரை மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

மதியம் 12 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5.30 மணிக்கு திருவாபரணம் சரங்குத்தியை அடைந்த பின்னரே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று மதியம் உச்சிகால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட பின்னர் 18ம் படி ஏற அனுமதி இல்லை. திருவாபரணம் அணிவித்து தீபாராதனை நடத்தி மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். இன்று மாலை புல்மேட்டில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் புல்மேட்டில் உள்ளவர்கள் சத்ரம் பகுதிக்கு திரும்பி விடவேண்டும்.
நாளை (15ம் தேதி) காலை முதல் மட்டுமே புல்மேட்டில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மகரஜோதி தரிசிக்க அனுமதி அளிக்கப்படும். மரங்களின் மீது ஏறவோ, உயரமான இடங்களுக்கு செல்லவோ அனுமதி கிடையாது. பக்தர்கள் தங்கியுள்ள குடில்களில் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

 

The post இன்று மகரவிளக்கு பூஜை சபரிமலையில் 1.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: நெரிசலை தவிர்க்க கட்டுப்பாடுகள் appeared first on Dinakaran.

Read Entire Article