ஆவாரம்பூ குக்கீஸ்… கருப்பு கவுனி அரிசி பிரவுனீஸ்!

5 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

நிராகரிப்பு ஒருவரின் மனதில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். ஒரு சிலர் அதிலிருந்து மீண்டு தனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்வார்கள். கோவையை சேர்ந்த புனிதா ராணி இரண்டாவது ரகம். எம்.எஸ்.சி பி.எட் முடித்து ஆசிரியராக பணியாற்றினார். குடும்பத்திற்காக வேலையில் சிறிது பிரேக் எடுத்தவர் அதன் பிறகு பலதரப்பட்ட நிராகரிப்பினை சந்தித்துள்ளார்.

அந்த வலிதான் இப்போது அவரை ஒரு தொழில்முனைவோராக மாற்றியுள்ளது.‘பி அண்ட் எஸ்’ கேக் சோன் என்ற பெயரில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் கேக், ஐஸ்கிரீம், குக்கீஸ், பிரவுனி போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்வது மட்டுமில்லாமல் பெண்களுக்கு கேக் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘11 வருடம் ஆசிரியர் பணியில் இருந்தேன். கோவிட்டுக்குப் பிறகு எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதன் பிறகு என் உடல் நலம் காரணமாக என்னால் மீண்டும் ஆசிரியர் பணியில் ஈடுபட முடியவில்லை. ஆனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க விரும்பினேன். அதனால் ரீசேல் பிசினசில் ஈடுபட்டேன். அதாவது, உடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்தேன். என்னிடம் வாங்கியவர்கள் உங்களுடைய ெபாருளா என்று கேட்பார்கள்.

நான் இல்லை என்று சொல்லும் போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். சிலர் என்னிடம் உள்ள பொருட்கள் குறித்து தெரிந்து கொண்டு நம்மை நிராகரிப்பார்கள். அந்த சமயம் நாம் ஏன் மற்றவர்களுக்கு இப்படி வேலை பார்க்கணும். நாம சொந்தமா தொழில் செய்தால் இந்த நிராகரிப்பு இருக்காதேன்னு எண்ணம் ஏற்படும். ஆனால் அப்போது அந்த முயற்சியில் என்னால் ஈடுபட முடியுமா என்ற சந்தேகம் என்னுள் இருந்தது’’ என்றவர் தொழில் துவங்கிய காரணத்தையும் கூறினார்.

‘‘ஆசிரியர் வேலை போல் எனக்கு சமையல் மேலும் தனிப்பட்ட ஆர்வமுண்டு. ஓட்டலில் புதிய உணவு பிடித்திருந்தால் அதை வீட்டில் செய்து பார்ப்பேன். ஆரம்பத்தில் 80% அதே போல் வரும். பிறகு சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து 90% அதே சுவையினை கொண்டு வந்திடுவேன். காரணம், உணவில் ஆர்வம் இருந்தால் சாப்பிடும் போதே அதில் என்ன சேர்த்து இருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும். அப்படித்தான் ஒவ்வொரு உணவினையும் நான் என் குடும்பத்தினருக்கு செய்ய ஆரம்பித்தேன்.

அதன் வரிசையில்தான் கேக் தயாரிப்பு மேல் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது. வீட்டில் சின்ன விசேஷம், பிறந்தநாள் பார்ட்டி என நானே யுடியூப் பார்த்து செய்தேன். ஆனால் பெரும்பாலான கேக்குகள் மைதாவில் தயாரிப்பதால், எனக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை. இதற்கு மாற்று என்ன என்று தேடினேன். அப்போது ஒரு கடையில் பனானாவீட் கேக் சாப்பிட்டேன். சுவை பிரமாதமாக இருந்தது. அதை வீட்டில் செய்த போது நன்றாகவே வந்தது. அதனைத் தொடர்ந்து வேறு எதில் எல்லாம் தயாரிக்கலாம் என்று ஆய்வு செய்தேன். ராகி, கம்பு, தினையில் செய்து பார்த்தேன். சிறுதானியங்கள் மட்டுமில்லாமல், பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் போன்றவற்றில் பிரவுனி குக்கீஸ்கள் செய்தேன்.

பொதுவாக பாரம்பரிய வகை உணவுகளில் கஞ்சி, களி போன்றவற்றைதான் செய்வார்கள். ஆனால் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். அவர்கள் சாப்பிடக்கூடிய உணவினை ஆரோக்கியமாக கொடுத்தால் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் என்னுடைய ேகக் மற்றும் குக்கீஸ்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டிதான் பயன்படுத்துகிறேன்.

குக்கீஸ் மட்டுமில்லாமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டோனட் மற்றும் பீட்சாவினையும் கோதுமையில் தயாரித்து தருகிறேன். இது மைதாவை விட மிகவும் மிருதுவாக இருக்கிறது. அதே போல் ஐஸ்கிரீம்களுக்கு கருப்பு கவுனி அரிசியினை வெனிலா பேஸ் போல் அமைத்து அதில் நாம் விரும்பும் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பட்டர்ஸ்காட்ச், பலாப்பழம், இளநீர் போன்ற ஃபிளேவர்களை கொடுக்கலாம். இதுவே சாக்லேட் ஃபிளேவர் வேண்டும் என்றால் அதற்கு ராகி சிறந்தது. ராகியில் கோகோவினை சேர்த்தால் சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்’’ என்றவர் ஆரம்பத்தில் நிறைய பெயிலியரை சந்தித்துள்ளார்.

‘‘மைதா மாவில் கேக், குக்கீஸ் செய்வது சுலபம். ஆனால் அதுவே கோதுமை, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்யும் போது ஒவ்வொன்றும் ஒரு தன்மை என்பதால் அதற்கு சரியான விகிதம் இருக்க வேண்டும். கொஞ்சம் மாவு அதிகமானாலும் கேக் மிருதுவாக இருக்காது. கம்பு மாவு அதிகமானால் உணவில் கசப்புத் தன்மை ஏறிடும். பலமுறை டிரையலுக்கு பிறகுதான் என்னால் சரியான அளவினை கணிக்க முடிந்தது. எல்லாவற்றையும் விட இதை சாப்பிடும் போது வயிற்றுக்கு உபாதையினை ஏற்படுத்தக்கூடாது. முதலில் நாங்க சாப்பிட்டு பார்ப்போம். ேமலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டிரையல் கொடுப்பேன்.

அவர்களிடம் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் அதில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்வேன். மேலும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசியினை நாம் நேரடியாக சாப்பிட முடியாது. அதை ஊற வைத்து, காயவைத்து, மாவாக திரித்து, சலித்து, வறுத்த பிறகுதான் பயன்படுத்த முடியும். அதனாலேயே கடைகளில் கிடைக்கும் மாவினை நான் பயன்படுத்துவதில்லை’’ என்றவர் சமூகவலைத்தளம் மூலம்தான் இதனை விற்பனை செய்ய துவங்கியுள்ளார்.

‘‘இன்று எல்லாம் சமூகவலைத்தளம் என்றாகிவிட்டது. அதில் விளம்பரம் செய்தேன். மேலும் எனக்குத் தெரிந்தவர்களிடம் கொடுத்த ேபாது, அவர்கள் மற்றவர்களிடம் வாய் வார்த்தையாக சொன்னார்கள். அவர்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் வந்தார்கள். உணவுப் பொருட்களை பொறுத்தவரை தரம் மற்றும் சுவை முக்கியம். இவை இரண்டுமே இருந்தால் நமக்கான வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக நம்மைத் தேடி வருவார்கள். வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து என்னுடைய ஒவ்வொரு உணவிலும் சின்னச் சின்ன மாற்றங்களை கொண்டு வந்தேன். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு சங்கப்பூ மற்றும் ஆவாரம்பூவில் பிரவுனிகளை செய்து தருகிறேன்.

இதன் மூலம் அவர்கள் இனிப்பினை சாப்பிட்டது போல் இருக்கும். அதே சமயம் உடலுக்கும் தீங்கு ஏற்படுத்தாது. பெண்கள் மற்றும் கிட்ஸ் ஸ்பெஷல் என அவர்களின் உடலுக்கு நலன் தரக்கூடிய குக்கீஸ், பிரவுனி மற்றும் கேக்குகளை தயாரிக்கிறேன். உதாரணத்திற்கு கருப்பு திராட்சை பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்லது. பனங்கிழங்கில் குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கியம் நிறைந்துள்ளது. நாவல் பழ கொட்டை நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லது. இது போல் ஒவ்வொருவரின் ஆரோக்கியம் சார்ந்து கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்கிறோம்’’ என்றவர் பெண்களுக்கு கேக் பேக்கிங் குறித்து ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சியினை அளித்து வருகிறார்.

‘‘என் அப்பாவிற்கு நான் ஆசிரியராக வேண்டும் என்பது ஆசை. அதற்காககவே என்னை பி.எட் படிக்க வைத்தார். தன் மகள் ஆசிரியை என்று சொல்வதில் அவருக்கு பெருமை. என்னிடம் படித்த மாணவர்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும். ஆனால் என்னால் அந்தப் பணியினை தொடர முடியவில்லை என்றாலும் என் தொழில் மூலம் நான் பேக்கிங் ஆசிரியராக மாறி இருக்கிறேன்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பேக்கிங் குறித்த பயிற்சி அளிக்கிறேன். என்னிடம் பயின்ற பெண்கள் இப்போது சொந்தமாக சம்பாதிக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது மனசுக்கு நிறைவா இருக்கு. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் குடும்பம்தான் முக்கிய காரணம். சில சமயம் என் கணவர், குழந்தைகள் எல்லோரும் பேக்கிங் செய்ய எனக்கு உதவி செய்வார்கள்.

தற்போது வீட்டில் ஒரு பகுதியில்தான் இதனை செய்து வருகிறேன். விரைவில் சிறிய அளவில் யூனிட் ஒன்றை துவங்க வேண்டும். நிறைய பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். புதுப்புது உணவுகளை அறிமுகம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இப்படி பல திட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கு’’ என்றார் புன்னகையுடன் புனிதா ராணி.

தொகுப்பு: ஷம்ரிதி

The post ஆவாரம்பூ குக்கீஸ்… கருப்பு கவுனி அரிசி பிரவுனீஸ்! appeared first on Dinakaran.

Read Entire Article