
கராச்சி,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று (19-02-2025) முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.
இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால் ஒவ்வொரு அணியினரும் நீயா-நானா? என்று வரிந்து கட்டி நிற்பார்கள்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்திய இந்தியா, பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரில் வாகை சூடிய நியூசிலாந்து மற்றும் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று (புதன்கிழமை) கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த வாரம் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானை இரண்டு முறை தோற்கடித்து மிரட்டியது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், வில் யங், டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், சான்ட்னெர், பிரேஸ்வெல், மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்கே உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் வலுசேர்க்கிறார்கள். பந்து தாக்கி நெற்றியில் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா உடல்தகுதியை எட்டும்பட்சத்தில் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலிமையடையும்.
உள்ளூர் சூழல் பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சமாகும். முத்தரப்பு தொடரில் சோபிக்காத முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இந்த போட்டியிலும் அவர் தொடக்க வீரராக இறங்குவதை கேப்டன் ரிஸ்வான் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல்தகுதியை எட்டி விட்டதாகவும் ரிஸ்வான் கூறினார். மற்றபடி ரிஸ்வான், சல்மான் ஆஹா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இவ்விரு அணிகள் இதுவரை 118 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 53-ல் நியூசிலாந்தும், 61-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.
கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 353 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:-
நியூசிலாந்து:
கான்வே, ரச்சின் ரவீந்திரா அல்லது வில் யங், வில்லியம்சன், டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி, வில்லியம் ஓ ரூர்கே.
பாகிஸ்தான்:
பாபர் அசாம், பஹர் ஜமான், சாத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆஹா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.
இதுவரை சாம்பியன்கள்
1998 - தென்ஆப்பிரிக்கா
2000 - நியூசிலாந்து
2002 - இந்தியா-இலங்கை
2004 - வெஸ்ட் இண்டீஸ்
2006 - ஆஸ்திரேலியா
2009 - ஆஸ்திரேலியா
2013 - இந்தியா
2017 - பாகிஸ்தான்
2025 - ????
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 2025 முழு அட்டவணை:-

கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும். இதில் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.19.5 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.9.7 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.