
நொய்டா,
டெல்லி அருகே உள்ள நொய்டா நகரத்தின் கவுர் சிட்டி-2 பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு எட்டு வயது சிறுவன், லிப்டில் மேல் தளத்திற்கு செல்ல தயாராக இருந்தான். அப்போது அந்த பெண், கயிறு கட்டப்படாத தனது வளர்ப்பு நாயுடன் லிப்டில் ஏறி உள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுவன், நாயுடன் உள்ளே வர வேண்டாம் பயமாக இருக்கிறது என்று கூறி கெஞ்சி உள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த பெண், அந்த சிறுவனை தரதரவென இழுத்து லிப்டை விட்டு வெளியேற்றிவிட்டு தனது நாயுடன், லிப்டில் ஏறி சென்று விட்டார். முன்னதாக அந்த பெண், சிறுவனை தாக்கியதாகவும், பல முறை அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தகாட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான குடியிருப்பு வாசிகள் குவிந்தனர். அந்தப் பெண் தனது நாய்களுக்காக மற்ற குடியிருப்பாளர்களுடன் பல சமயங்களில் சண்டையிட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.