
ஐதராபாத்,
சமீப காலமாக இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. தெலுங்கானாவில் பள்ளிக்கு நடந்து சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள சிங்கராயப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ நிதி (16 வயது). இவர் காமரெட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் ஸ்ரீ நிதி வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் பள்ளிக்கு அருகில் வந்தபோது, திடீரென மாணவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவி மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்ரீ நிதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.