
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தமுள்ள 70 லீக்கில் இதுவரை 51 ஆட்டங்கள் முடிந்துள்ளது. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்து சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) இழந்து வெளியேறி விட்டன.
'பிளே-ஆப்' சுற்றின் 4 இடங்களுக்கு 8 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
இந்நிலையில், இப்போட்டியின் மூலம் ஆர்.சி.பி வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் விராட் கோலி மேற்கொண்டு 53 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், ஐ.பி.எல் தொடரில் தனது 8500 ரன்களை நிறைவு செய்வார்.
விராட் கோலி இதுவரை 262 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 8447 ரன்கள் அடித்துள்ளார். இதில் 61 அரைசதம் மற்றும் 8 சதம் அடங்கும். இதனை அவர் செய்யும் பட்சத்தில் ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் 8500 ரன்களை பூர்த்தி செய்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை அவர் படைப்பார்.