இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை துவங்கியது

3 weeks ago 5

பெரம்பலூர், அக். 21: தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்கியது. கிராமப் புறங்களில் இப்போதே பட்டாசு சத்தம் கேட்கிறது. இந்திய நாடு முழுக்க கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகை வருகிற 31ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் நகரில் உள்ள ஜவுளி மற்றும் ரெடிமேட் துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் இப்போதே அலைமோதத் தொடங்கிவிட்டது. அதே போல் தீபாவளி பண்டிகைக்குத் தேவை யான பலகாரங்களை இப்போதே பொதுமக்கள் ஸ்வீட் ஸ்டால்களில் ஆர்டர் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

புத்தாடைகளுக்கும், இனிப்புக்கும் மட்டுமன்றி பட்டாசுகளுக்கும் முக்கிய பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை கருதப்படுகிறது. எனவே பெரம்பலூர் நகரில் ஏற்கனவே பட்டாசு கடை நடத்தி வரும் வியாபாரிகள் தங்களது அனுமதியை புதுப்பித்து கடையை தற்போது திறக்க தொடங்கி விட்டனர். புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் அனுமதிக்காக விண்ணப் பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்து ள்ள நபர்களுக்கான கடைகள் அமைவிடங்களை மேற் கண்ட துறையினர் ஆய்வு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பண்டிகைக்கு 10 நாட்கள் முன்பாகவே பெரம்பலூர் நகரில் பட்டாசு விற்பனை பரபரப்பாக தொடங்கியுள்ளது. குறிப்பாக பெரம்பலூர் நகர பட்டாசு உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தினர் கடைகளை அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தீயணைப்பு சாதனங்களுடன் திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி விட்டனர். இதற்காக கடைகளின் முன்பு வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், இங்கு பட்டாசு வெடிக்க கூடாது. இங்கு புகைப் பிடித்தல் கூடாது. பாது காப்பு கருதி குழந்தைகள் கடைகளுக்குள் வர அனுமதி இல்லை.

செல்போன்களை பட்டாசு கடைக்குள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். கடை உரிமையாளர், விற்பனையாளர் அனுமதி இன்றி பட்டாசுகளை தொடக்கூடாது. இங்கு சீன பட்டாசுகள் விற்பனை இல்லை. பொம்மை துப்பாக்கியை கடைகளில் பரிசோதனை செய்ய அனுமதி இல்லை என எழுதப்பட்டு, அதன்கீழே அவசரகால தொலைபேசி எண்கள் தீயணைப்பு 101 மற்றும் 04328-224101, 04328- 224225, அவசர போலீஸ் 100 மற்றும் 04328- 277100, ஆம்புலன்ஸ் 108 என அச்சடித்த பேனர்களை கடையின் முன்பாக வைத்துள்ளனர். இது பட்டாசு வாங்க வரும் பொது மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article