நன்றி குங்குமம் தோழி
வீட்டைக் கட்டும் போது உள் அலங்காரம், சுவற்றின் அமைப்பு என தனிப்பட்ட கவனம் செலுத்தினாலும், பலர் வீட்டின் தரைக்கு என்ன டிசைனில் டைல்ஸ், மார்பில் அல்லது கிரானைட் கற்கள் பதிக்கலாம் என்றுதான் முதலில் சிந்திப்பார்கள். அந்த வரிசையில் தற்போது பலரின் சாய்ஸாக மாறி இருக்கிறது ‘எபாக்சி புளோரிங்.’ பார்க்க பளபளப்பாக இருக்கும் இந்த டெக்னிக்கில் தற்போது 3டி முறையில் டிசைன் செய்கிறார்கள். ‘‘மெயின்டெயின் செய்வது சுலபம். வீட்டிற்கு ஒரு தனி அழகினை கொடுக்கும் இந்த எபாக்சி புளோரிங்’’ என்கிறார் பழனி. இவர் வீடு மட்டுமில்லாமல் அலுவலகம், மருத்துவமனை, சமையல் மேடை, உணவுத்துறை என அனைத்து இடங்களுக்கும் அழகான தரைகளை வடிவமைத்து வருகிறார்.
‘‘சொந்த ஊர் மதுரை, சென்னைக்கு வந்து 20 வருஷமாச்சு. கடந்த 19 வருஷமா எபாக்சி புளோரிங் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் சென்னைக்கு வந்த போது ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராகத்தான் வேலை பார்த்து வந்தேன். சில அலுவலகப் பிரச்னை காரணமாக நான் அந்த வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு மாசம் எந்த வேலையும் கிடைக்கல. ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஊருக்கும் திரும்ப போகவும் விருப்பமில்லை. அந்த சமயத்தில் நிரந்தரமாக வேலை கிடைக்கும் வரை தினசரி கூலியாக பெயின்டர் வேலைக்கு சென்று வந்தேன். அப்பதான் எபாக்சி புளோரிங் செய்ய உதவியாளரா வேலை கிடைச்சது. அந்த டெக்னிக் பிடிச்சிருந்ததால், அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
அது குறித்து நிறைய ஆய்வு செய்தேன். உதவியாளரா இருந்து நான் கான்ட்ராக்டராக மாறினேன். அதனைத் ெதாடர்ந்து இப்போது நானே தனிப்பட்ட முறையில் எடுத்து செய்து வருகிறேன். தற்போது இதில் நிறைய டிசைன்களை உருவாக்கினேன். 3டி முறையிலும் இதனை வடிவமைக்கலாம். அதில் லேட்டெஸ்ட் ரேடியம் புளோரிங். அதாவது, வயதானவர்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் அறையில் இருந்து எழுந்து செல்ல எளிதாக இருக்க, தரையின் ஒரு பகுதியில் ெவளிச்சம் தென்படும்’’ என்றவர், எபாக்சி புளோரிங் குறித்து விவரித்தார்.
‘‘எபாக்சி என்பது பாலிமர் ரெசின் மற்றும் ஹார்டனர் இணைத்து செய்யப்படும் புளோரிங். டைல்சினை எவ்வாறு கான்கிரீட் தரையில் ஒட்டுகிறோமோ அதே போல்தான் இந்த எபாக்சி கலவையை கான்கிரீட் தரை மேல் போடுவார்கள். வழவழப்பாக இருக்கும் இந்த எபாக்சி பலவித நிறங்கள், டிசைன்களில், வடிவங்களில் உள்ளது. பொதுவாக தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் உணவுத் துறைகளில்தான் இதனை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது இந்த எபாக்சி முறைகளை வீட்டிலும் பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள். இதில் பலவகைகள் உள்ளன. அதில் 3டி, மெட்டாலிக் புளோரிங் அனைவரும் விரும்புகிறார்கள்.
3டி என்பது, நாம் விரும்பும் டிசைன்களை அப்படியே தரையில் கொண்டு வரலாம். மீன் துள்ளிக் குதிப்பது, கடல் அலைகள் என நாம் விரும்பும் டிசைன்களை கொண்டு வர முடியும். மெட்டாலிக் புளோரிங், எபாக்சியுடன் மெட்டாலிக் பவுடரை இணைப்பது. நாம் விரும்பும் நிறங்களில் அமைக்கலாம். இது மிகவும் வழுவழுப்பாக இருக்கும். இது மற்ற டைல்ஸ் போல் உடையாது.
சுத்தம் செய்வது எளிது. தினமும் நாம் பயன்படுத்தும் தரை கிளீனர் கொண்டு மாப் செய்தால் போதும். கரை ஏற்பட்டால் அதை சுத்தம் செய்வதும் எளிது. மேலும் இதை மாற்றி அமைக்க டைல்ஸ் போல் உடைத்து எடுக்க தேவையில்லை. மூன்று வருடத்திற்கு ஒரு முறை நாம் விரும்பும் டிசைன்களை மேலே ஒரு கோட்டிங் போல் கொடுத்தாலே போதும். மேலும் இது டைல்ஸ் மார்பிலை விட மிகவும் விலை குறைவு என்பதால் பலரும் விரும்புகிறார்கள்’’ என்றார் பழனி.
தொகுப்பு: ரிதி
The post இனி டைல்ஸ் தேவையில்லை! appeared first on Dinakaran.