
ஜகர்த்தா,
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.
வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன. இருப்பினும் நாடு முழுவதும் ஆங்காங்கே சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இந்தநிலையில் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுரங்கத்தில் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில், நேற்று வடக்கு பப்புவாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சட்டவிரோத தங்க சுரங்கத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சுரங்கம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.