போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை: சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்

4 hours ago 3

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூரை சேர்ந்த இளம்பெண் (வயது 39 ), பேரூர் கடையில் வசித்து வரும் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்ல அவர் பஸ் நிலையத்தை வந்தடைந்தார்.

அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், பேரூர் கடை போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். நீங்கள் வேலை பார்த்த வீட்டில் 5 பவுன் தங்க சங்கிலி திருடு போனதாகவும், உங்கள் மீது சந்தேகம் இருக்கிறது, எனவே நீங்கள் போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உடனடியாக அப்பெண், விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு மகளிர் போலீசார் அப்பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை செய்துள்ளனர். நான் திருடவில்லை, என்னை நம்புங்கள் என கூறியும் போலீசார் விடவில்லை. இரவு முழுவதும் விசாரணை நடத்தியதோடு சாப்பாடும் கொடுக்கவில்லை. குடிக்க தண்ணீர் கேட்டும் போலீசார் அலட்சியப்படுத்தியுள்ளனர்.

மறுநாள் காணாமல் போன தங்க சங்கிலி கிடைத்து விட்டதாக பேரூர் கடை போலீசாருக்கு புகார் கொடுத்தவர் கூறியுள்ளார். ஆனால் இந்த விவரத்தையும் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட அப்பெண்ணுக்கு தெரிவிக்கவில்லை. மாறாக, விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் வர வேண்டும் என கூறி திட்டி அனுப்பியுள்ளனர். பிறகு இந்த விவரம் அப்பெண்ணுக்கு தெரிய வர அவர் மற்றும் குடும்பத்தினர் இதுகுறித்து முதல்-மந்திரிக்கும், டி.ஜி.பி.க்கும் புகார் அளித்தனர்.

மேலும் இந்த புகார் குறித்து திருவனந்தபுரம் சரக டி.ஐ.ஜி.விசாரணை நடத்தினார். பின்னர் பேரூர் கடை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்தை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இந்த நடவடிக்கையில் திருப்தியில்லை என கூறிய இளம்பெண், நிர்வாணமாக்கி சோதனை செய்த அனைத்து போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தநிலையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸ் நிலையத்தில் அந்த பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரத்திற்கு வெளியே பணியாற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கூடுதலான அதிகாரி தலைமையில் முழு விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article