ஜகார்த்தா,
இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்கள் நாசமாகியுள்ளன. மேலும் தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால், பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமால் போனவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.