இந்துஸ்தான் வர்த்தக சபையின் புதிய தலைவராக லினேஷ் சனத்குமார் பதவியேற்பு

3 months ago 26

சென்னை,

இந்துஸ்தான் வர்த்தக சபை (எச்.சி.சி.) 1945-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில், வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவினை சார்ந்த சுமார் 1,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளை தொடர்புகொள்வது, வணிகத்தை சுமுகமாக நடத்துவதை பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து மனுவாக அரசுகளிடம் வழங்குதல், அரசுகளின் கொள்கைகள், சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இதன் முக்கிய நோக்கமாகும். இந்துஸ்தான் வர்த்தக சபையின் 2024-25-ம் ஆண்டுக்கான புதிய தலைவராக லினேஷ் சனத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லினேஷ் சனத்குமார் மராட்டிய மாநிலம் மும்பையில் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர். பழைய காகிதங்களை சேகரித்து, மறுசுழற்சி செய்வதற்காக காகித ஆலைகளுக்கு வினியோகிக்கும் தனது குடும்ப தொழிலில் 1989-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறார். 50 வருடங்களையும் கடந்து அந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு பின்பு, லினேஷ் சனத்குமார் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 78-வது ஆண்டு கூட்டம் அதே ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட லினேஷ் சனத்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் விஜய் பி.சோர்டியா வரவேற்றார்.இதைத்தொடர்ந்து ஆண்டு மலரை தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 'எலக்ட்ரானிக்ஸ் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை தொழில் நிறுவனத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் தயாரிப்பில் தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இதற்காக மத்திய அரசு உதவ தயாராக உள்ளது' என்றார்.தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சிவ்தாஸ் மீனா, இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஸ்ரீவட்ஸ் ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக லினேஷ் சனத்குமார் பேசும்போது, 'பாரம்பரியமிக்க இந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இந்த சங்கம் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. அந்த வகையில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பேன்' என்றார். இந்துஸ்தான் வர்த்தக சபையின் வருங்கால தலைவர் டி.ரமேஷ் துகர், துணை தலைவர்கள் பிரவீன்குமார் தாட்டியா, ரியாஸ் ரசாக், பொருளாளர் ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article